விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவர் உள்பட 6 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி: பொதுமக்கள் அச்சம்

விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவர் உள்பட 6 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி: பொதுமக்கள் அச்சம்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் ஒரு மருத்துவர், 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு இன்று ஒரே நாளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கெனவே அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளில் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

அதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் 90 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் சனிக்கிழமையன்று 3 மருத்துவர்கள் உள்பட 27 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், ராஜபாளையத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர் உள்ளிட்ட 4 பேருக்கும், அருப்புக்கோட்டையில் ஏற்கெனவே கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபரின் தாய் மற்றும் மனைவிக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராஜபாளையத்தைச் சேர்ந்த 4 பேரும் ஏற்கெனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதையடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்று அதிகரித்துள்ளதால் விருதுநகர் மாவட்டமும் சிவப்பு மண்டலத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in