Last Updated : 13 Apr, 2020 04:43 PM

 

Published : 13 Apr 2020 04:43 PM
Last Updated : 13 Apr 2020 04:43 PM

சமூக வலைதளங்களில் பரவும் கரோனா வதந்திகள்; புதுச்சேரியில் நூற்றுக்கணக்கான வாட்ஸ் அப் குழுக்கள் அழிப்பு

சமூக வலைதளங்களில் கரோனா தொடர்பான வதந்திகள் பரவியதை தொடர்ந்து அதில் தொடர்புடைய 85 பேரை அழைத்து புதுச்சேரியில் சைபர் கிரைம் எச்சரித்துள்ளது.

வாட்ஸ் அப், ட்விட்டர், முகநூல், டிக் டாக், இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில், எந்த பொய்யான, தவறான தகவல்களும் வரக்கூடாது என ஏற்கெனவே புதுச்சேரியில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் மக்கள் அச்ச மனநிலையில் உள்ள சூழலில் அவர்களின் மனதை பாதிக்கும் வகையில் கரோனா வைரஸ் பற்றி தகவல்கள் பரப்புவதை தடுக்க புதுச்சேரி சைபர் கிரைம் கண்காணிப்பு பணிகளை தொடங்கி நடவடிக்கையும் எடுக்க தொடங்கியுள்ளது.

சைபர் கிரைம் வட்டாரங்களில் விசாரித்தபோது, "ஊரடங்கு காலத்தில் வாட்ஸ் அப்பில் கரோனா வைரஸ் குறித்து தவறான பதிவுகளை போட்ட, சுமார் 85 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினோம். அவர்கள் மீது ஏற்கெனவே எவ்வித குற்றப்பதிவும் இல்லை.

முதல் முறை என்பதால் போலியான தகவல்கள். செய்திகள் பரப்பினால் முக்கியமான இக்காலத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை விளக்கி கடுமையாக எச்சரித்து அனுப்பினோம். மீண்டும் தவறிழைத்தால் கடும் நடவடிக்கை உண்டு என்று விளக்கியுள்ளோம்.

தவறான தகவல்களை பரப்பிய சுமார் 100-க்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் குரூப்களை கண்டறிந்து, அவற்றை நீக்கியுள்ளோம். கரோனா வைரஸ் குறித்து தவறான பொய் தகவல்களையும் செய்திகளையும் பரப்பியவர்கள் வயது 18 முதல் 60-க்குள் இருந்தது" என்று போலீஸார் தெரிவித்தனர்.

காவல்துறை உயர் அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "சைபர் கிரைம் மூலம் சமூக வலைதளங்களை புதுச்சேரியில் கண்காணிக்கிறோம். பதிவிடுவது மட்டுமல்லாமல் தவறான செய்திகளை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு அனுப்புவதும் தவறு.

முக்கியமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது வெறுப்பை, அவதூறைப் பரப்பும் செய்திகளையும் பதிவிடுவதும் தவறு. பொதுமக்களிடையே பதற்றத்தைக் குழப்பத்தை ஏற்படுத்தும் செய்திகளையும், கரோனா தடுப்பு நடவடிக்கை மீது அவநம்பிக்கை ஏற்படுத்தும் செய்திகளையும் உறுதிப்படுத்தாமல் சமூக வலைத்தளங்களில் பதிவிடுது தவறு.

இது போன்ற செய்திகள் பொதுமக்களின் அமைதி மற்றும் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிப்பதாகவும் கருதப்படும். குறிப்பாக வாட்ஸ் அப் குழுவில் இச்செயலை செய்பவர் மட்டுமின்றி, அக்குழுவின் நிர்வாகியும் (அட்மின்) இதற்கு பொறுப்புடையவர். அவரையும் அழைத்து விசாரிப்போம். இந்நிலை தொடர்ந்தால் இனி வழக்கு நிச்சயம்" என்றும் எச்சரிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x