Last Updated : 13 Apr, 2020 04:45 PM

 

Published : 13 Apr 2020 04:45 PM
Last Updated : 13 Apr 2020 04:45 PM

சுயமாகக் காய்ச்சத் தொடங்கிய தமிழக, இலங்கை குடிமகன்கள்-  ‘கலக்கல்’ பற்றி சமூக வலைதளங்களில் அசத்தல் விளக்கம்

சித்தரிப்புப் படம்

‘குமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் குக்கரில் சாராயம் காய்ச்சிய என்ஆர்ஐ இளைஞர் ராஜேஷ் கைது... தென்காசி மாவட்டம் ராயகிரியில் கரும்புத் தோட்டத்தில் சாராயம் காய்ச்சிய மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கைது...’ இப்படியெல்லாம் தொடர்ந்து விதவிதமாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

"தமிழ்நாட்டில் அரசே மது விற்று குடி அடிமைகளை அதிகமாக்கிவிட்டது. ஊரடங்கு காரணமாக ஏற்கெனவே மதுக்கடைகளை கொள்ளையடித்தவர்கள், இப்போது அதற்கும் வழியில்லாமல் போனதால் இப்படி சுயமாக காய்ச்சத் தொடங்கியிருக்கிறார்கள்" என்று குடிமகன்களில் சிலர் போர்க்குரல் எழுப்புகிறார்கள்.

இவர்களுக்கு உதவுவது போல சிலர் மூலிகைச் சாராயம் தயாரிப்பது எப்படி, கோயில் விழாக்களில் தயாரிக்கப்படும் முறைப்படி அரிசியில் இருந்து மது (பீர்) தயாரிப்பது எப்படி என்று முகநூலில் முனைப்புடன்(!) எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சில வீடியோக்களும் வாட்ஸ் - அப்பில் வலம் வருகின்றன.

தமிழ்நாட்டில்தான் இப்படி என்று பார்த்தால், இலங்கையிலும் அப்படித்தானாம். கிளிநொச்சி கல்லாறு பகுதியில் சாராயம் காய்ச்சிய இருவரை கைது செய்திருக்கிறார்கள் தர்மபுரம் போலீஸார். எங்கேயாவது கள்ளச்சாராயம் கிடைக்காதா என்று இளைஞர்களும், பெரியவர்களும் ஊரடங்கையும் மீறி இருசக்கர வாகனத்தில் வலம் வருவதாகச் சொல்கிறார் இலங்கையின் 'காலைக்கதிர்' பத்திரிகை செய்தியாளர் மின்னல். இதுபற்றி அவர் தனது நாளிதழில் எழுதியிருப்பதாவது:-

‘நமது தேசத்தின் ‘பெருங்குடி’ மக்களை இநத ஊரடங்கு புரட்டிப் போட்டுவிட்டது. ஊரடங்கு பிறப்பித்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டது. ஆனால், அவர்களின் வாயைக் குளிர்விக்கும் பானத்தை யாரும் கண்களில் காட்டக்கூட இடமளிக்கவில்லை. அதன் விளைவுகளை நாம் இப்போது சந்திக்கின்றோம்.

பூட்டப்பட்டிருந்த மதுச்சாலைகளின் கதவுகள், பூட்டுக்கள் உடைக்கப்பட்டு மதுர பானங்கள் சூறையாடப்படுகின்றன. ஆங்காங்கே சுய தயாரிப்புகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றன. தயாரிக்கத் தெரியாதவர்கள் விட்டத்தைப் பார்த்தபடி படுத்திருக்கிறார்கள். எப்படி அதைத் தயாரிப்பது என்பது குறித்து முகப்புத்தகத்திலோ, இணையத்திலோ தகவல் பரிமாறினால் கம்பி எண்ண வேண்டிவரும் என்று பொலிஸ் பேச்சாளரே (போலீஸ் செய்தித் தொடர்பாளர்) அறிக்கையிட்டு மிரட்டி அடக்கும் நிலைதான் இங்கு.

அவர்களின் பரிதாபத்தை விளக்க இன்னொரு தகவல். மருதனார்மடம் சந்தியில் சென்றுகொண்டிருந்த மூத்த ஊடகவியலாளரை மறித்தார் ஒரு போக்குவரத்துப் பிரிவு சப் இன்ஸ்பெக்டர். அவருடன் பல ராணுவத்தினர், பொலிஸார் நின்றிருந்தனர். தனது அடையாள அட்டையை காட்டுகையில், அவர் அக்கம் பக்கத்தை அவதானித்தார். இளசுகள் முதல் பெருசுகள் வரை ஒரு எட்டு, பத்துப் பேரை முழங்காலில் நிறுத்தியிருந்தனர் பொலிஸார். முட்டுக்காலில் இருப்பவர்கள் எல்லோர் கைகளிலும் போத்தல் அல்லது கான்கள் இருப்பதைக் கண்டதும் நமது ஊடகவியலாளருக்கு மனம் இளகிப்போய்விட்டது.

"பாவம், தோட்ட வேலை செய்யவோ, மோட்டர் சைக்கிளுக்கோ எரிபொருள் வாங்க வந்திருப்பார்கள். விட்டுவிடுங்கோ!" என்று அவர் பரிந்து பேசினார். அவரை ஏளனத்துடன் பார்த்த பொலிஸ் அதிகாரி, "வோட்டப் பம்புக்கோ, மோட்டார் சைக்கிளுக்கோ இல்லை. தங்கள் உடம்புக்கு எரிபொருள் போட வந்திருக்கினம். ஊரடங்கால் கள்ளு இறக்கின்றவர்களுக்கு வலு மவுசு. இவையள் தங்களுக்கும் வயிறு நிரப்பி, தங்களோடை மிச்சம் கொண்டு போறதுக்குத்தான் போத்தல்கள், கான்களுடன் வந்திருக்கினம்" என்றார் அந்த பொலிஸ் அதிகாரி.

இப்படி வீதிக்கு வீதி முட்டிக்காலிட்டு நிற்கும் இப்பெருங்குடி மக்களின் கோரிக்கை எல்லாம் ஒன்றே ஒன்றுதான். இந்த ரகங்கள் எல்லாம் அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களே. அதனை அத்தியாவசிய பொருள்களின் பட்டியலில் சேர்த்து, தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். யாரேனும் அரசியல்வாதிகள் இவர்களுக்காக குரல் கொடுத்து, இவர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவார்களா?’
- இப்படி எழுதியிருக்கிறார் அந்த பத்திரிகையாளர்.

நாட்டுக்கு நாடு இப்படித்தான் போல!.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x