Published : 13 Apr 2020 04:32 PM
Last Updated : 13 Apr 2020 04:32 PM

ஏப் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக அரசு கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அரசின் அனைத்துத் துறைகளையும் முடுக்கி விட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் ஸ்டாலின், அன்புமணி உள்ளிட்டோரும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க கோரிக்கை வைத்தனர்.

அதேபோன்று பிரமருடனான ஆலோசனைக் கூட்டத்திலும் முதல்வர் பழனிசாமி ஊரடங்கை நாடு முழுவதும் நீட்டிக்க கோரிக்கை வைத்திருந்தார். நோய்த்தொற்று பரவி வரும் நிலையில் சமூக விலகலைக் கடைப்பிடிக்க மேலும் 14 நாட்கள் ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் முடிவெடுத்து அறிவித்திருந்தன.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி ஊரடங்கை ஏப் 30 வரை நீட்டித்து அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமியின் அறிக்கை:

“உலகம் முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில், கடந்த மார்ச் 24 அன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவு முதலில் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு அதை ஏப்ரல் 15 அன்று காலை வரை நீட்டித்தது. ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பெரிய அளவில் பரவாது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது உள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாகவும், கரோனா வைரஸ் நோய்த் தொற்று தொடர்பாக மாநிலங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளையும், பிரதமர் காணொலிக் காட்சி மூலமாக ஏப்ரல் 11 அன்று கலந்தாய்வு மேற்கொண்டார்.

இக்கலந்தாய்வின்போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும், தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் எனவும், பிரதமரிடம் நான் எடுத்துரைத்தேன். மேலும், ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவினை நீட்டிக்க வேண்டும் என்ற என்னுடைய கருத்தினை தெரிவித்தேன். நானும், மற்ற முதலமைச்சர்களும் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கு உத்தரவினை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

பிரதமரின் கலந்தாய்வுக் கூட்டத்தின் நடவடிக்கைகளின் அடிப்படையிலும், உலக சுகாதார அமைப்பின் கருத்தின் படியும், மருத்துவ நிபுணர் குழு மற்றும் பொது சுகாதார வல்லுநர் குழுக்களின் பரிந்துரைகளின் படியும், மாநிலத்தில் ஊரடங்கை தளர்த்தினால், நோய்த் தொற்று அதிகரிக்கக் கூடும் என்பதை கருத்தில் கொண்டும், ஏப்ரல் 11 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படியும், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் படியும், குற்றவியல் விசாரணை முறை சட்டப் பிரிவு 144-ன் படியும், ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.

கரோனா நோய்த் தொற்றினை தடுக்கும் நோக்கில், பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005ன் படியும், குற்றவியல் விசாரணை முறை சட்டப் பிரிவு 144ன் படியும், தற்போது நடைமுறைபடுத்தப்பட்டு வரும் அனைத்துக் கட்டுப்பாடுகளும் தொடரும்.

* ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் காரணத்தினால், தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும்.

*கட்டிடத் தொழிலாளர்கள் உட்பட பதிவு பெற்ற அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கும், குடும்பம் ஒன்றுக்கு இரண்டாவது முறையாக 1,000 ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும்.

*பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு, மே மாதத்திற்காக 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும்.

பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்து,

* தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலான காலத்தில், அடுமனைகள் (பேக்கரி) இயங்கத் தடையில்லை என்பதையும், ஏற்கெனவே, உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி அடுமனைகளிலும் பார்சல் விற்பனை மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெளிவுபடுத்தப்படுகிறது.

* மேலும், சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள மக்கள், கரோனா நோய் தொடர்பான தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள டெலி மெடிசின் சொஸைட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் பதிவு பெற்ற சிறந்த மருத்துவர்களைக் கொண்டு, தொலை மருத்துவ முறை மூலம் தங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு தெளிவு பெற தமிழ்நாடு அரசு வழிவகை செய்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு குடும்பமும் பாதுகாப்பாக இருப்பது தான் அரசுக்கு மிகவும் முக்கியமானது. ஆகவே, தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்படுகின்ற அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் பின்பற்றி, "விழித்திருங்கள், விலகி இருங்கள், வீட்டில் இருங்கள்" என்ற கோட்பாட்டின் அடிப்படையில், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x