

விருதுநகர் மாவட்டத்தில் மிளகாய் அறுவடை தீவிரமடைந்துள்ளது. விவசாயிகள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்ற வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
மானாவாரி கரிசல் நிலங்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்களில் மிளகாய் முக்கியப் பயிராகும்.
விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக பரப்பளவில் மானாவாரியாக சாகுபடியாகிறது. இதில் சம்பா ரகங்களை விட மானாவாரி ரகங்களே அதிகம். ரகங்களைப் பொருத்தவரை கே1,கே2 போன்ற உயர் விளைச்சல் சம்பா ரகங்களும், நாட்டு முண்டு ரகங்களும், வீரிய ஒட்டு ரகங்களும் பயிரிடப்படுகின்றன.
செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் இதன் பருவமாகும். இந்த பருவத்தில் நடவு செய்த பயிர்களில் தற்போது விவசாயிகள் மிளகாய் பழங்களை அறுவடை செய்துவருகின்றனர்.
அறுவடையின் போது விவசாயிகள் சில தொழில்நுட்பங்களை பின்பற்றி வருமானத்தை அதிகரிக்கலாம் என்ற வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர். விஜயலட்சுமி மற்றும் உதவிப் பேராசிரியர் முனைவர்.சி.ராஜா பாபு ஆகியோர் கூறுகையில், மிளகாய்த் தோட்டத்தில் பழம் அழுகல் நோயை கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸி குளோரைடு தெளித்து கட்டுப்படுத்திட வேண்டும்.
பொட்டாஷ் உரமிடுவதால் காய்களின் நிறமும், காரத்தன்மையும் அதிகரிக்கிறது. மிளகாய் செடியில் பழங்கள் முழுவதும் சிவப்பு நிறமாக மாறியவுடன் பழங்களைப் பறிக்கலாம்.
மிளகாய்ப் பழங்களை காம்புடன் பறிக்க வேண்டும். பழங்களைப் பறித்த அன்றே காயப் போட வேண்டும். மணல் பரப்பிய கலங்களில் பழங்களைப் பரப்பி உலர விட வேண்டும். மிதமான வெப்பநிலை உள்ள காலையிலும், மாலையிலும் 4 நாட்கள் உலர விட வேண்டும்.
நன்கு உலர்த்திய மிளகாய் வற்றலில் இருந்து காய்ப் புழு தாக்கிய மற்றும் பழம் அழுகல் நோய் தாக்கிய, நிறம் மாறிய சண்டு வற்றல் மேலும் உடைந்த மிளகாய் வற்றலை நீக்கி நல்ல வற்றலைப் பிரித்து எடுக்க வேண்டும்.
மேலும், அறுவடையின் போதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க விவசாயிகளும் வேளாண் சார்ந்த தொழிலாளர்களும் சமூக இடைவெளியை பின்பற்றுவதோடு முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
வேளாண் பணிகள் முடிவடைந்தவுடன் வீட்டிற்கு வந்த உடன் 20 நொடிகள் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும் என அறிவுறுத்தினர்.