

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு, மாநிலங்களுக்கு ஒதுக்கிய நிதியில் பாரபட்சம் இருந்ததை தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே சுட்டிக்காட்டின. நோய்த்தொற்று மற்றும் இறப்பில் அப்போது முன்னணியில் இருந்த மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளாவை விட உ.பி., பிஹார் போன்ற இந்தி பேசும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதை அரசியல் கடந்து அனைத்துத் தரப்பினரும் கண்டித்தார்கள்.
இதற்கிடையே மாநில முதல்வர்களுடன் பிரதமர் நடத்திய ஆலோசனையின்போது, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நிதி தொடர்பாக பல கோரிக்கைகளை முன்வைத்தார். அதில், பெரும்பாலான கோரிக்கைகளை மத்திய அரசு இதுவரையில் ஏற்கவில்லை. இதனால், வெறுங்கையால் முழம்போடுகிறது மத்திய அரசு என்று தமிழக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இதற்கிடையே, மாநில நிவாரண நிதிக்கு வர வேண்டிய பணத்தையும்கூட பிரதமர் நிவாரண நிதிக்குத் திருப்புகிற நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. உதாரணமாக, கார்ப்பரேட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகம் கடந்த 10-ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், பிரதமர் நிவாரண (PM CARES Fund) நிதிக்கு நிறுவனங்கள் நிதியளித்தால் அது சிஎஸ்ஆருக்கு (கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டம்) செலவளித்ததாக ஏற்றுக் கொள்ளப்படும் என்றும், அதேநேரம் மாநில முதல்வர்களின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்தால் அது சிஎஸ்ஆர் ஆக ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் அறிவித்தது. அதனால் பெரும் நிறுவனங்கள் மத்திய அரசுக்கே நிதியளிக்கும் சூழல் ஏற்பட்டது.
இதைச் சமாளிப்பதற்காக தமிழ்நாடு அரசு சமயோசிதமாகச் செயல்பட்டு, தற்போது புதிய உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. அதன்படி மார்ச் 24-ம் தேதி முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கும் தொகை மாநிலப் பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றப்படும் என்று கூறியிருக்கிறது. மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு நிறுவனங்கள் அளிக்கும் தொகையானது சிஎஸ்ஆராக ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவித்தது.
இன்னொரு பக்கம் வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நேரடியாகப் பணம் அனுப்ப முடியாது என்று விதி உள்ளது. ‘பிஎம் கேர்ஸ்’க்குத்தான் அனுப்ப முடியும். ஏற்கெனவே கேரள மாநிலத்தில் பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டபோது, தங்கள் நாட்டின் வளர்ச்சியில் பங்காற்றிய கேரள மாநிலத்தவருக்கு நன்றி பாராட்டும் வகையில் துபாய் நாட்டு அரசு, நிவாரணமாக நிதி வழங்கியது.
அந்தத் தொகையை நேரடியாகக் கேரள முதல்வரின் நிவாரண நிதியில் சேர்ப்பதற்கு மத்திய அரசின் சட்டம் இடம் தரவில்லை. அது கேரளத்தவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது போலவே, இப்போது வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் என்ஆர்ஐக்களில் சிலர், தங்கள் உறவினர்களின் வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பி, முதல்வரின் நிவாரண நிதியில் சேர்த்துவிடும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஏன் இப்படி என்று கேட்டபோது, "ஆபத்துக் காலத்தில் உடனடியாக உதவுவது நாம் அருகில் இருப்பவர்கள்தான் என்பதைக் கரோனா உணர்த்தியிருக்கிறது. மலை மீது இருக்கிற தலைமையிடம் கையேந்தி நிற்பதைவிட, நம் வீட்டு வாசலில் நிற்கிற தலைமையிடம் கேட்டுப் பெறுவது எளிதானது. எனவே, முதல்வர் நிவாரண நிதிக்கே பணத்தை அனுப்புகிறோம்" என்றனர்.
அத்தனையிலும் அரசியல் இருக்கிறது என்ற உண்மையைக் கரோனா காலமும் நமக்குப் புரிய வைத்திருக்கிறது.