Published : 13 Apr 2020 01:18 PM
Last Updated : 13 Apr 2020 01:18 PM

ஊரடங்கில் கைகொடுக்கும் மாடித் தோட்டம்: தோட்டக்கலைத் துறை முன்னாள் அதிகாரி பெருமிதம்

ஓய்வு பெற்ற தோட்டக்கலைத்துறை அதிகாரியான அக்ரி ராஜ்குமார் தன் வீட்டுத் தேவைக்கான காய்கறிகளை மொட்டைமாடியில் அமைத்திருக்கும் மாடித்தோட்டம் மூலமே பூர்த்தி செய்துகொள்கிறார். இதனால் ஊரடங்கு காலத்தில் காய்கறித் தேவைக்காக கடைகளுக்குச் செல்லும் நிலையே அவருக்கு ஏற்படவில்லை.

குமரி மாவட்டம், மார்த்தாண்டம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். தோட்டக்கலைத்துறை துணை இயக்குநராக இருந்து ஓய்வுபெற்ற இவர், தன் வீட்டு மொட்டை மாடியில் மாடித்தோட்டம் அமைத்திருக்கிறார். அதில் தவசிக்கீரை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, மணத்தக்காளிக் கீரை, பசலைக் கீரை உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான கீரை வகைகளையும், கத்திரி, வெண்டை, தக்காளி, சீனி அவரை, வழுதலங்காய், மிளகாய் உள்பட பலவகை காய்கறிகளையும் சாகுபடி செய்து வருகிறார்.

கடந்த இருபது வருடங்களாகவே மாடித்தோட்டம் மூலம் வீட்டுத்தேவைக்கான காய்கறிகளை உற்பத்தி செய்துவரும் அக்ரி ராஜ்குமார், இந்த ஊரடங்கு காலத்தில் தன் வீட்டிலேயே சுயசார்பாக தேவைகளைப் பூர்த்தி செய்திருக்கிறார்.

தன் வீட்டு மாடித்தோட்டத்தை சுற்றிக்காட்டிய அக்ரி ராஜ்குமார் நம்மிடம் பேசுகையில், “சின்னவயசுல இருந்தே எனக்கு இயற்கை, விவசாயத்தின் மீது சினேகம் அதிகம். அதனாலேயே பி.எஸ்.சி., விவசாயம் படிச்சேன். பல்கலைக்கழக அளவுலயும் முதலிடத்தில் வந்தேன். படிப்புமேல நாட்டம் என்பதைவிட விவசாயத்துல இருந்த ஈடுபாடுதான் அதுக்குக் காரணம்.

வீட்டுக்கு வீடு வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைச்சாலே தற்சார்பு வாழ்க்கை வாழ்ந்திடமுடியும். அதுக்காகவே ‘க்ரீன் அக்ரி கிளப்’ன்னு குமரி மாவட்ட விவசாயிகளைச் சேர்த்து ஒரு அமைப்பு தொடங்கி நடத்திட்டு இருக்கேன். குமரி மாவட்டத்தில் மட்டும் ஆயிரம் குடும்பங்களுக்கு மேல வீட்டுத்தோட்டம் போட்டுருக்காங்க. அவங்க அத்தனை பேருமே வீட்டுத்தோட்டத்தின் முக்கியத்துவத்தை இந்த ஊரடங்கு நேரத்தில் புரிஞ்சுகிட்டதா கூப்பிட்டு பேசுனாங்க.

வீட்டுத் தோட்டத்தில் சில நுட்பங்களைக் கையாண்டாலே நம்ம வீட்டுக்குத் தேவையான காய்கறித் தேவையை பூர்த்தி செஞ்சுடலாம். கீரை 45 நாள் பயிர். பொன்னாங்கண்ணி மாதிரியான சில கீரை வகைகள் மூணு வருசம் வரைக்கும் பலன் தரும். சாதாரண வெண்டை 120 நாள் பயிர். நாட்டு வெண்டையா இருந்தா 6 மாசம்வரை மகசூல் எடுக்கலாம். இயற்கை விவசாயம்தான் வீட்டுத் தோட்டத்தோட அடிப்படை. அதனால் நம்மளோட முக்கியமான அறுவடையே குடும்பத்தோட ஆரோக்கியம்தான். ஒருதடவை நட்ட வழுதலங்காய் அஞ்சு வருசம் வரைக்கும் மகசூல் கொடுக்கும்.

என்னோட வீட்டில் கால்நடை வளர்க்க இடமில்லை. அதனால் மாட்டுச் சாணம், கோமியத்தை வெளியில் இருந்து வாங்கி வீட்டுத்தோட்டத்துக்கு உரமாக்கிடுவேன். அழுகிப்போன வாழைப்பழத்தை அதன் தோலோடு சேர்த்து, மோரில் ஊறப்போட்டு பழக்காடியாக்கியும் செடிகளுக்குத் தெளிப்பேன். இது நல்ல வளர்ச்சியூக்கியா இருக்கும். இதேபோல் மீன் கழிவையும், சர்க்கரையையும் சம அளவில் எடுத்து ஊறவைத்தும் செடிகளுக்கு அடிப்பேன். இது பூச்சித் தொல்லையை கட்டுப்படுத்துவதோடு, வளர்ச்சியூக்கியாவும் இருக்கும். மாட்டுக்கோமியத்தை பயன்படுத்தியே பூச்சிவிரட்டியும் தயாரிச்சு அடிப்பேன். எங்க வீட்டுல இருந்தே காய்கறித் தேவையை பூர்த்தி செய்யுறதால உணவே மருந்துன்னு சொல்லுற முதுமொழியும் எங்க வீட்டுக்கு பொருந்திப் போகுது.

இந்த ஊரடங்கு காலத்தில் ஒரு நாள்கூட வெளியில் இருந்து காய்கறி வாங்கல. தினசரி ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துப்போம். கூடவே கத்திரி, வெண்டை, புடலைன்னு ஏதாவது ஒரு கூட்டு வைக்கும் அளவுக்கு சுழற்சி முறையில் காய்ச்சுக்கிட்டே இருக்கும். ரொம்ப வருசமா நண்பர்கள் பலரிடமும் வீட்டு, மாடித்தோட்டம் பத்தி சொல்லிக்கிட்டே இருக்கேன். அவங்களுக்கு இந்த நேரத்தில் அதோட அவசியத்தை ஊரடங்கு காட்டிக் கொடுத்துருக்கு” என்றார் அக்ரி ராஜ்குமார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x