Last Updated : 31 Aug, 2015 02:35 PM

 

Published : 31 Aug 2015 02:35 PM
Last Updated : 31 Aug 2015 02:35 PM

மதுரை புத்தகக் கண்காட்சியில் முதன்முறையாக ஓலைச்சுவடி பதிப்புடன் சரஸ்வதி மகால் நூலக அரங்கம்

தமிழகத்தின் தொன்மையான நூலகமான சரஸ்வதி மகால் நூலகம் முதன் முறையாக மதுரை புத்தகக் கண்காட்சியில் அரங்கு அமைத்துள்ளது. பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட முன்னோர்களின் அறிவுத்திரட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இங்கு விற்பனைக்கு உள்ளது.

சரஸ்வதி மகால் நூலகம்

தஞ்சையில் உள்ள மிகப் பழமையான சரஸ்வதி மகால் நூலகத்தில் கிடைப்பதற்கு அரிய பல தொன்மையான ஓலைச்சுவடிகளில் இருந்து பதிப்பிக்கப்பட்ட மருத்துவ, ஜோதிட, பாரம்பரிய அறிவு சார்ந்த நூல்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன.

தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களில் முக்கியமானவரான இரண்டாம் சரபோஜி (1777-1783) பன்மொழிப் பண்டிதர் மட்டுமின்றி இலக்கியம் மற்றும் வரலாற்று நூல்களில் ஆர்வம் கொண்டவர். இவர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தமிழ், சம்ஸ்கிருதம், தெலுங்கு மற்றும் மராட்டிய மொழிகளில் இருந்த ஆகச்சிறந்த மருத்துவ, ஜோதிட, நுண்கலை மற்றும் ஆன்மிக நூல்களையும், ஓலைச்சுவடிகளையும் சேகரித்து வந்தார்.

12-ம் நூற்றாண்டிலேயே இந்த நூலகம் இருந்தாலும்கூட, இரண்டாம் சரபோஜி கொண்டு வந்து சேர்த்த நூல்களின் எண்ணிக்கை மட்டும் 47000 ஆகும். அவற்றை பன்மொழிப் புலவர்களைக் கொண்டு தமிழிலும், வேறு மொழிகளிலும் மொழிபெயர்த்தார்.

வெறுமனே நூலகத்தில் மட்டும் இருந்தால் போதாது, இந்த அறிவுத்திரட்டுகள் எல்லாம் மக்கள் கைகளில் தவழ வேண்டும் என்று நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் பதிப்பகம் தொடங்கப்பட்டு பல புத்தகங்கள் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப் பட்டு வருகின்றன.

ஆட்சியர் ஏற்பாடு

இந்த நூலகம் சார்பில் அரங்கு அமைக்கப்பட்டிருப்பது மதுரை புத்தக கண்காட்சிக்கு சிறப்பு சேர்த்திருக்கிறது. மதுரை வாசகர்கள் குறிப்பாக மூத்த குடிமக்கள் இந்த அரங்கத்தை மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டு, புத்தகங்களை தேர்வு செய்கின்றனர். இந்த நூலகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அதன் இயக்குநரும் தஞ்சை மாவட்ட ஆட்சியருமான டாக்டர் சுப்பையன் வேண்டுகோளின் பேரில், மதுரை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் இந்த அரங்கத்துக்கு சலுகை கட்டணத்தில் இடம் ஒதுக்கி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அரங்க பொறுப்பாளர் மூ.நேருவிடம் கேட்டபோது அவர் கூறியது: மக்களின் ஆர்வம் காரணமாக ஒரு கட்டத்தில் புத்தகங்கள் எல்லாம் விற்றுப்போய்விட்டன. தஞ்சையின் தற்போதைய ஆட்சியர் புத்தகங்கள் மீது ஆர்வம் கொண்டவர் என்பதால், தீர்ந்துபோன புத்தகங்களை எல்லாம் மறுபதிப்பு செய்ய உத்தரவிட்டார். அதன்படி கடந்த 2 ஆண்டுகளில் 162 தலைப்புகளில் புத்தகங்கள் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன.

வழக்கமாக சென்னையில் மட்டுமே அரங்கு அமைக்கும் நாங்கள் இந்த ஆண்டு, ஈரோடு, கோவை புத்தக கண்காட்சியிலும் அரங்கு அமைத்தோம். இவ்விரு ஊர்களிலும் தலா 1 லட்சம் அளவுக்கு புத்தகங்கள் விற்பனை யானதால், பழமையைப் போற்றுகிற மதுரையிலும் அரங் கம் அமைத்துள்ளோம்.

50 சதவிகிதம் தள்ளுபடி

சித்த மருத்துவச்சுடர், பஞ்சகாவ்ய நிகண்டு, ரத்னாவளி போன்ற மருத்துவ நூல்களும், சாதக சிந்தாமணி, நட்சத்திர சிந்தாமணி, காலச்சக்கரம் போன்ற ஜோதிட நூல்களும், நிலத்தடி நீர் காணுதல், கணக்கதிகாரம் போன்ற தமிழர்களின் பாரம்பரிய அறிவு அடங்கிய நூல்களும், அமரகோசம் என்ற சம்ஸ்கிருத மொழி பெயர்ப்பு நூலும் அதிகளவில் விற்பனையாகிறது. நோய், நோய் மூலம், மருத்துவ முறை, பத்தியம் பற்றி விரிவாகச் சொல்லும் சித்த மருத்துவச் சுடர் போன்றவை அனைவரின் வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல்” என்றார்.

இந்த அரங்கில் ரூ.50 விலையுள்ள நூல்களுக்கு 10 சதவீதமும், அதற்கு மேல் ரூ.199 வரையுள்ள நூல்களுக்கு 20 சதவீதம், ரூ.200-க்கு மேல் விலையுள்ள நூல்களுக்கு 30 சதவீதம் கட்டணக் கழிவு வழங்கப்படுகிறது. 1999-க்கு முன்பு வெளியிடப்பட்ட நூல்கள் 50 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது. வாங்கும் எண்ணமில்லாவிட்டாலும்கூட அவசியம் பார்வையிட வேண்டிய அரங்கு இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x