

கரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் வழங்க வலியுறுத்தியும் கானா பாடல் ஒன்றை பாடி வெளியிட்டுள்ளார் திருவாடனை சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரையும் போன்று வீட்டிலேயே இருக்கும் சினிமாப் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதில், கரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் முக்கிய இடம் பெற்றுள்ளது. குறிப்பாக பிரபலங்கள் பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இந்நிலையில் பாப் பாடகரான கருணாஸ், தமிழில் ஏராளமான படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடத்துள்ளார். இவர் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
கருணாஸ் காரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் வழங்க வலியுறுத்தியும் பாடல் ஒன்றை உருவாக்கி யூ-டியூபில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து எம்.எல்.ஏ கருணாஸ் கூறியதாவது,
தனிச்சிருங்க விழிச்சிருங்க விசிலடிச்சான் புள்ளிங்கோ... ஊரடங்கு உட்காருங்க வீட்டிலேயே புள்ளிங்கோ.... கொள்ளை நோயி கொரோனா, குரல்வளையை கவ்வுது... கொத்துக்கொத்தா மக்கள் எல்லாம் மண்ணுக்குள்ள மடியுது... என்று தொடங்கும் இந்த பாடலை கவி பாஸ்கர் எழுதி, போபே சசி இசையமைத்துள்ளார்.
நானே இந்தப் பாடலை நாட்டுப்புறப் பாடல் பாணியில் கானாப் பாடலாகப் பாடியுள்ளேன். பாடலில் கரோனா விழிப்புணர்வுடன் முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் வழங்கவும் வலியுத்தி உள்ளேன், என்றார்.
எஸ். முஹம்மது ராஃபி