

ஊரடங்கு உத்தரவால் வருமானத்துக்கு வழியின்றி தவிக்கும் நாட்டுப்புற கிராமியக் கலைஞர்கள் தங்களை பட்டினிச் சாவிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஒவ்வோர் ஆண்டும் தை மாதம் தொடங்கி ஆடி மாதம் வரை தமிழகம் முழுவதும் கிராமக் கோயில்களில் திருவிழாக்கள் நடக்கும். திருவிழாக் காலங்களில் புராண- இதிகாச நாடகங்கள், கரகாட்டம், ஒயிலாட்டம், ஆடல்-பாடல், இன்னிசைக் கச்சேரிகள் என கலை நிகழ்ச்சிகள் களைகட்டும்.
இந்த காலகட்டங்களில் நாட்டுப்புற கிராமியக் கலைஞருக்கு ஓய்விருக்காது. வருமானத்துக்கும் குறைவிருக்காது. இந்த சமயத்தில் கிடைக்கும் வருமானத்தை வைத்துத் தான் ஓராண்டு முழுவதும் வாழ்க்கை நடத்துவர்.
ஆனால் இந்தாண்டு கரோனா வைரஸ் பரவல், நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வையே சூறையாடிவிட்டது. வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தால் மட்டுமே உயிர் பிழைக்கும் முடியும் என்ற நிலை உள்ளது.
இதனால் அனைத்து கோயில் திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் நாட்டுப்புறக் கலைஞர்கள், நடிகர்கள், நடனக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் வருமானத்திற்கு வழியின்றி தவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழக அனைத்து இசை நாடக நடிகர் சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பழ.காந்தி கூறியதாவது:
கரோனா வைரஸ் நாட்டுப்புற கிராமியக் கலைஞர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையுமே சீரழித்துவிட்டது. தமிழகத்தில் மட்டும் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் இந்த நாட்டுப்புறக் கலையை மட்டுமே நம்பி இருக்கிறது. இந்தாண்டு சீசன் தொடங்கியதால் ஒவ்வொரு கலைஞரும் சராசரியாக 100 நிகழ்ச்சிகள் வரை புக்கிங் செய்திருந்தனர்.
இப்போது அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் வருமானத்திற்கு வழியின்றி தவிக்கின்றனர். ஊரடங்கு விலக்கு கொள்ளப்பட்டாலும் திருவிழாக்கள் நடப்பது கஷ்டம் தான். நடிப்புக்காக இன்னும் ஓராண்டு காலம் காத்திருக்க வேண்டும். சீசனை நம்பி ஏராளமாக கடன் வாங்கி இருக்கின்றனர். அதை எப்படி அடைப்பது என நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
தமிழகத்தில் பல்லாயிரம் நாட்டுப்புறக் கலைஞர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களில் 20 சதவீதம் பேர் மட்டுமே தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனர்.
அவர்களுக்கு மட்டுமே அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை ரூபாய் ஆயிரம் கிடைக்கும். மற்றவர்கள் பாடு திண்டாட்டமாக தான் உள்ளது, என்று கூறினார்.