Published : 13 Apr 2020 07:31 AM
Last Updated : 13 Apr 2020 07:31 AM

கோவை மாவட்டத்தில் இறைச்சி கடைகள் இயங்க தடை- ஆட்சியர் உத்தரவு

கோவை

கோவை மாவட்டத்தில் இறைச்சிக் கடைகள் இயங்கத் தடை விதித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

144 தடை உத்தரவு அமலில் உள்ள சூழலில், மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் இதுவரை 546 பேருக்கு சந்தேக அடிப்படையில் பரிசோதனை மேற்கொண்டதில், 427 பேருக்கு தொற்று இல்லை என்று தெரிய வந்துள்ளது. 97 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், 22 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

மேட்டுப்பாளையம், அன்னூர், பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் கோவை மாநகரின் சில பகுதிகளில் 700 பணியாளர்கள் மூலம், 97,000 வீடுகளில் உள்ளவர்களுக்கு சளி, காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளதுடன், இப்பகுதிகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் நேற்று (12-ம் தேதி) முதல் இறைச்சிச் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டு, மறு உத்தரவு வரும் வரை, அவற்றை மூட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தடை உத்தரவை மீறி வெளியே வருவோர் மீதும், சமூக வலைதளங்களில் வதந்தி, அவதூறு பரப்புவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x