திருச்சி மருத்துவமனை கரோனா வார்டில் மருத்துவர்கள் மீது முகக்கவசம் வீசி தகராறு செய்தவர்கள் மீது வழக்கு

திருச்சி மருத்துவமனை கரோனா வார்டில் மருத்துவர்கள் மீது முகக்கவசம் வீசி தகராறு செய்தவர்கள் மீது வழக்கு
Updated on
1 min read

திருச்சி அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில் மருத்துவர்கள் மீது முக கவசத்தை கழற்றி வீசி தகராறு செய்தவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருச்சி அரசு மருத்துவ மனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள திருச்சி மற்றும் கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 46 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்களில் திருச்சி மாநகராட்சி தென்னூரைச் சேர்ந்த நபருக்கு கரோனா தொற்று உறுதியானதால், கடந்த 7-ம் தேதி அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அந்நபரின் தாயாருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

இதையடுத்து, சுகாதாரத் துறையினர் அவரது தாயாரை கடந்த 10-ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

இதுகுறித்து அறிந்த அந்த நபர், எனது குடும்பத்தில் உள்ளவர்களை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் எனக்கேட்டு, அப்போது அந்த வார்டில் பணி யிலிருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக மேலும் சில நோயாளிகளும் சேர்ந்து மருத்துவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, அங்கு பணியி லிருந்த பெண் மருத்துவர் ஒருவர் புத்தூர் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

அதில், கரோனா தொற் றுள்ள சிலர் வேண்டுமென்றே, தங்களது முக கவசங்களை கழற்றி எங்கள் மீது வீசி, தகராறில் ஈடுபட்டனர். உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனத் தெரிந்தே இச்செயலில் ஈடுபட்டதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.

இதுகுறித்து பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுப்பது, கொலை முயற்சி ஆகிய 3 பிரிவுகளின் கீழ் சிலர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in