

கிருமிநாசினி சுரங்கம் பயனற்றதுஎன்பதால், அதை யாரும் அமைக்க வேண்டாம். பயன்படுத்தவும் வேண்டாம் என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை (டிபிஎச்) இயக்குநர் க.குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ்பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அடிக்கடி சோப்பு போட்டுநன்றாக கைகளை கழுவ வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத் துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையே, கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கிருமிநாசினிசுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள் ளது. தொடர்ந்து அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை அரசு பொதுமருத்துவமனையிலும் கிருமிநாசினி சுரங்கப்பாதையை அமைத்துள்ளனர். சுரங்கப்பாதையில் செல்லும் பொதுமக்கள் மீது தெளிக்கப்படும் கிருமிநாசினி திரவங்களால், உடலில் பாதிப்பு ஏற்படவாய்ப்பிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை (டிபிஎச்) இயக்குநர் க.குழந்தைசாமி வெளியிட்ட அறிவிப்பில், “கிருமிநாசினி சுரங்கம் பயனற்றது. ஆல்கஹால், குளோரின், லைசால் ஆகியவற்றை மனிதர்கள் மீது தெளிப்பதால், அவர்களுக்கு தீங்கு ஏற்படலாம். இதன்மூலம் கை கழுவுதல் பழக்கம் திசை திருப்பப்படுகிறது. எனவே, கிருமிநாசினி சுரங்கங்களை ஏற்படுத்த வேண்டாம். அதை பயன்படுத்த வேண்டாம்” என்று தெரி வித்துள்ளார்.