Published : 13 Apr 2020 07:10 AM
Last Updated : 13 Apr 2020 07:10 AM

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட வாட்ஸ்அப் குழுவை வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் மத்திய நகர்ப்புற அமைச்சகம்: சிறந்த சேவைகள் மேம்படுத்தப்பட்டு, பிற மாநகரங்களுக்கு பரிந்துரை

சென்னை

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்துக்காக மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கிய வாட்ஸ்அப் குழு, தற்போது கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல மாநகரங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் கரோனா தடுப்புசேவைகளை பிற மாநகரங்கள் பின்பற்ற வசதியாக உள்ளது.

இந்தியாவில் மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் உள்ள 100 மாநகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் நல்ல திட்டங்களை, பிற மாநகராட்சிகள் பின்பற்ற ஏதுவாக இந்த அமைச்சகம் சார்பில்,100 மாநகராட்சிகளின் முக்கிய அதிகாரிகளைக் கொண்ட வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டிருந்தது.

இதில், தற்போது நகர்ப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும்கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறந்தவற்றை பிற மாநகராட்சிகள் பின்பற்ற ஏதுவாக ஸ்மார்ட் சிட்டி குழுவில் பதிவிடுமாறு மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் இணை செயலர் குணால்குமார் அறிவுறுத்தியுள்ளார். இந்த நடவடிக்கைகளால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சிகள் எளிதாக மேற்கொண்டு வருகின்றன.

இதுகுறித்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் இணை செயலர் குணால்குமார் கூறியதாவது:

இப்போது இந்தியாவில் கரோனா வைரஸை ஒழிக்க தகவல் தொடர்பும், தொழில்நுட்பமும் மிகவும் அவசியமாகிறது. அதைக் கொண்டு பொதுமக்களையும், அரசையும் இணைக்க வேண்டும். அதனால் இந்த ஸ்மார்ட் சிட்டி வாட்ஸ்அப் குழு, கரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கான சிறந்த நடைமுறைகளை பரிந்துரைக்கும் குழுவாக மாற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் மருத்துவம் சார்ந்த அறிவுரைகள் வழங்கப்படுவது மட்டுமல்லாது, மருத்துவம் சாராத, ஊரடங்கு காலத்தில் வெளி மாநில தொழிலாளர்கள், நகர்ப்புற வீடற்றோர் ஆகியோருக்கு உணவு கிடைக்கச் செய்வது வழங்குவது போன்றவை மீதும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதில் மாநகராட்சிகள், கரோனாவை ஒழிக்க எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது எனவும் ஆலோசனை வழங்கப்படுகிறது.

தொழில்நுட்பரீதியாக வலுவான பகுதியான பெங்களூருவில் தொழில்நுட்ப வல்லுநர்கள், மென்பொறியாளர்கள், தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் பல்வேறு செயலிகளை உருவாக்கி வருகிறோம். மேலும் அங்குள்ள ஸ்மார்ட் சிட்டியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், மாதிரி போர்க்கால கட்டுப்பாட்டு மையமாக மாற்றப்பட்டுள்ளது.

இதில், இந்த வாட்ஸ்அப் குழுவில் வரும், சில மாநகரங்கள் பின்பற்றும் கரோனா வைரஸ் ஒழிப்பு திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு, அதில் உள்ள குறைகள் நீக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு உகந்த எளிமையான திட்டமாக மாற்றி, பிற நகரங்களுக்கு பரிந்துரைக்கப்பட உள்ளது. இங்கு உருவாக்கப்படும் செயலியை சிறு மாற்றம் செய்துஅந்தந்த மாநகராட்சிகள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று குஜராத் மாநிலம் சூரத்தில், தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க, மனநல மருத்துவர்களைக் கொண்டு ஆலோசனை மையத்தை உருவாக்கினர். இதைப் பார்த்து தற்போது பல்வேறு நகரங்களில் அமைத்து வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி, மனநலஆலோசனை வழங்கும் மையத்தில், குறிப்பிட்ட மண்டலத்தில் இருந்து அழைப்பு வந்தால் அதை குறிப்பிட்ட மருத்துவர்தான் ஆலோசனை வழங்க வேண்டும் என்று முறைப்படுத்தியது. தூத்துக்குடி, மதுரை மாநகரங்களில் முதன்முதலில் நடமாடும்காய்கறி சேவை தொடங்கப்பட்டு, இந்தக் குழுவில் பதிவிடப்பட்டதைத் தொடர்ந்து, இதைப் பார்த்து, நாட்டின் பிற மாநகரங்களில் செயல்படுத்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x