Published : 12 Apr 2020 08:49 PM
Last Updated : 12 Apr 2020 08:49 PM

இந்தியாவிலேயே உரிமைக்கு குரல் கொடுத்த பெருமை கொண்ட மாநிலம்: பேரிடர் காலத்தில் மத்திய அரசு முன் அஞ்சி நிற்கிறது: திருமாவளவன் வேதனை

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் கடுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. அந்த பாகுபாட்டுக்கும் தமது எதிர்ப்பைக் காட்ட வில்லை. அதை சிறு முணுமுணுப்பும் இன்றி தமிழக ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கை:

"தமிழக ஆட்சியாளர்கள் தமிழகத்துக்கு உரிய நிதியையும், உரிமைகளையும் கேட்டுப் பெறாமல் மத்திய அரசுக்கு விசுவாசம் காட்டுவதையே முதன்மையான கடமை என்று கருதி வருகிறார்கள். தமிழ்நாட்டுக்குச் சேரவேண்டிய ஜிஎஸ்டி வரி பாக்கி பத்தாயிரம் கோடிக்கு மேல் உள்ளது. அதை இதுவரை இங்கிருக்கும் ஆட்சியாளர்கள் கேட்டுப் பெறவில்லை.

அதுமட்டுமின்றி கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் கடுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. அந்த பாகுபாட்டுக்கும் தமது எதிர்ப்பைக் காட்ட வில்லை. இப்போது விரைவாக மருத்துவ பரிசோதனை செய்யும் ரேபிட் டெஸ்டிங் கருவிகள்; மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள்; வென்டிலேட்டர் முதலான சாதனங்கள் ஆகியவற்றை மாநில அரசு நேரடியாக வாங்கக் கூடாது மத்திய அரசுதான் வாங்கித்தரும் என்று மோடி அரசு தடை விதித்துள்ளது.

அதை சிறு முணுமுணுப்பும் இன்றி தமிழக ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். பொது சுகாதாரம் என்பது மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் உள்ளது. தேசிய பேரிடர் காலம் என்பதைப் பயன்படுத்திக்கொண்டு மாநிலங்களின் உரிமையைப் பறிக்க மோடி அரசு முனையும்போது அதற்கு தமிழகம் உடன்படக்கூடாது. இந்தியாவிலேயே மாநில உரிமைகளுக்காகக் குரல் எழுப்பிய பெருமை கொண்ட மாநிலம் தமிழகம் ஆகும்.

ஆனால் தற்போதுள்ள ஆட்சியாளர்களோ தற்சார்பு சிறிதுமின்றி பாஜகவின் ஆட்சி தான் இங்கு நடக்கிறதோ என்று ஐயுறும் விதமாக நடந்துகொள்கின்றனர். இது அவர்களுடைய கட்சி பிரச்சனையோ தனிநபர் பிரச்சினையோ அல்ல. இதனால் தமிழக மக்களின் உயிர் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது. இந்தியாவிலேயே பரிசோதிக்கப்பட்ட நபர்களில் அதிகமாக நோய்த்தொற்று கொண்டவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள்.

ஏறத்தாழ 11% பேருக்கு மேல் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே மிகக் குறைவான நபர்களுக்கு பரிசோதனை செய்யும் மாநிலமாகவும் தமிழகம் இருக்கிறது. இதன் மூலம் தெரியவருவது என்னவெனில் அதிகமான நபர்களுக்கு சோதனை செய்யப்பட்டால் இங்கு நோய்த்தொற்று இருப்பவர்கள் எண்ணிக்கையும் மிக அதிகமாக உயரக்கூடிய வாய்ப்பு உள்ளது.

அப்படி உயர்ந்தால் இந்தியாவிலேயே மிக அதிகமான நோய்த்தொற்று கொண்டவர்கள் இருக்கும் மாநிலமாகத் தமிழகம் மாறி விடும். நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போதே ஆயிரம் பேரைத் தாண்டிவிட்டது. இந்த வேகத்தில் போனால் அடுத்த வாரத்திலேயே இது 2000 ஆக உயர்ந்து விடக்கூடும். எனவே, மத்திய அரசுக்கு விசுவாசம் காட்டுவதற்கு முன்னுரிமை தராமல் தமிழக மக்களுடைய உயிரைக் காப்பதில் தமிழக அரசு அக்கறை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்

தடையுத்தரவு நீட்டிக்கப்படுமா இல்லையா என்பதையும் அடுத்து தடையுத்தரவு நீட்டிக்கப்பட்டால் வழங்கப்பட உள்ள நிவாரணம் எவ்வளவு என்பதையும் தமிழக அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் பதட்டமின்றி இருக்க முடியும். இதையும் பிரதமர் அறிவித்த பிறகுதான் செய்வோம் என்று இருந்தால் பாதிக்கப்படுவது மக்கள் தான் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறோம்”.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x