

ஊரடங்கு பாதிப்பு நிவாரண நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளையும் தொண்டர்களாக பாரபட்சமின்றி பயன்படுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
“கரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழகத்தில் கடந்த 17 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டு, பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியே வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு வீடுகளில் இருக்கும் மக்களுக்குத் தேவையான பொருட்களை வீடுகளுக்கே சென்று விநியோகிப்பதற்கும், நியாயவிலை கடைகள், காய்கறி மார்க்கெட் போன்ற இடங்களில் சமூகவிலகலை உத்தரவாதப்படுத்தவும், மக்களை ஒழுங்குபடுத்துவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தங்களை பதிவு செய்ய வேண்டுமென அரசின் சார்பில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இதனை ஏற்று தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த இளைஞர்கள் மற்றும் தொண்டு அமைப்பினர் தங்களது பெயர்களை பதிவு செய்து உள்ளார்கள். ஆனால் நான்கு மாவட்டங்களை தவிர, இதர மாவட்டங்களில் இவ்வாறு பதிவு செய்யப்பட்ட தொண்டர்களை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் தயாராக இல்லை.
பலமுறை கேட்ட பிறகும் மாவட்ட நிர்வாகங்களில் இருந்து உரிய பதில்கள் கிடைக்கவில்லை. ஆனால், அதேசமயம் வேறு சில அரசியல் அமைப்புகள் மற்றும் மத அமைப்புகளுக்கு நூற்றுக்கணக்கான அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டு அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
முன்னெப்போதுமில்லாத நெருக்கடி மிகுந்த இந்த நேரத்தில் கூட அரசும் மாவட்ட நிர்வாகங்களும் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தொண்டர்களைப் பயன்படுத்துவதில் பாரபட்சம் காட்டுவது வருத்தத்திற்கு உரியது.
பிரதிபலன் பாராமல் அர்ப்பணிப்புணர்வுடன் மக்களுக்கு சேவை செய்ய முன்வருபவர்களை பாரபட்சமின்றி பயன்படுத்துவதே அரசின் அணுகுமுறையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.