Published : 18 May 2014 10:00 AM
Last Updated : 18 May 2014 10:00 AM

ராகுலின் தன்னிச்சையான செயல்பாடுகளால் படுதோல்வி: காங்கிரஸ் நிர்வாகிகள் குமுறல்

மாநிலத் தலைமைகளை கலந்து பேசாதது, மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைகளை புறக்கணித்தது என்று ராகுல் காந்தி தன்னிச்சையாக செயல்பட்டதே, காங்கிரஸை இந்த அளவுக்கு அதலபாதாளத்தில் தள்ளிவிட்டதாக கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது. நாடு முழுவதும் காங்கிரஸுடன் கூட்டணி சேரவே பெரும்பாலான மாநில கட்சிகள் தயக்கம் காட்டின. அப்போதே காங்கிரஸின் தேர்தல் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பது தெரிந்துவிட்டது.

தமிழகத்திலும் எந்தக் கூட்டணிக் கதவும் திறக்காததால் வேறுவழியின்றி 39 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது காங்கிரஸ். குமரியில் வசந்தகுமாரைத் தவிர, மற்ற அனைவரும் டெபாசிட்டை இழந்துவிட்டனர். வெறும் 4.4. சதவீத வாக்குகளையே காங்கிரஸ் வேட்பாளர்கள் பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்ற பிறகு கட்சி கொஞ்சம் வலிமையாகவே இருந்தது. கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைய சோனியா வழி வகுத்தார். ஆனால், காங்கிரஸின் இளவரசரான ராகுல் காந்தி துணைத் தலைவராகி, கட்சியை வழி நடத்தத் தொடங்கியதில் இருந்துதான் பல்வேறு சிக்கல்களை அந்தக் கட்சி சந்தித்தது.

தன்னுடன் இருக்கும் ஒருசில மாநில நிர்வாகிகளையும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளையும் மட்டுமே நம்பி தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் ராகுல் என்பது பரவலாக கட்சிக்குள் கூறப்படும் குற்றச்சாட்டாக உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தலில் வேட்பாளர் தேர்வு முழுவதும் நேரடியாக ராகுல் கட்டுப்பாட்டிலேயே நடந்தது. இளைஞர் காங்கிரஸுக்கு முக்கியத்துவம் என்று கூறி, கட்சியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமாகாதவர்களை வேட்பாளராக்கினார்.

ராகுலின் வழிகாட்டுதல் கட்சிக்கு பின்னடைவைத் தந்ததே தவிர, எந்த விதத்திலும் பலனளிக்கவில்லை. கட்சியில் பல கோஷ்டிகள் இருக்கும் நிலையில், ராகுலும் தன் பங்குக்கு ஆதரவாளர்களை ஒரு கோஷ்டியாக்கிக் கொண்டார்.

தேர்தல் நிதி ஒதுக்கீட்டிலும் ராகுல் கோஷ்டியை சேர்ந்த வேட்பாளர்களுக்கு 2 கோடி, மற்றொரு தரப்புக்கு ஒரு கோடி, மூன்றாம் தரப்பு வேட்பாளர்களுக்கு 25 லட்சம் மற்றும் 50 லட்சம் என்று பாரபட்சமாக தரப்பட்டதாகவும், இதற்கு மேலிடமே முழுப் பொறுப்பு என்றும் குற்றச்சாட்டு உள்ளது. அதிக நிதி பெற்ற ராகுல் ஆதரவாளர்களில் பலர், 50 ஆயிரம் வாக்குகளைக்கூட தாண்டவில்லை என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கூட்டணி அமைக்க எந்த முயற்சியும் எடுக்காததும் மாநில நிர்வாகிகளையும் கோஷ்டித் தலைவர்களையும் ஆலோசிக்காமல் விட்டதும் தோல்வியை அளித்துள்ளதாக பேசப்படுகிறது.

வாட், சேவை வரி மற்றும் அடிக்கடி உயர்த்திய பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பிரதமர் வேட்பாளரை அடையாளம் காட்டாதது என பல குளறுபடிகள் மத்திய அரசு மீதும் காங்கிரஸ் மீதும் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. அதை எதிர்கொள்ளும் வகையில் வலுவான கூட்டணிக்கு முயற்சிக்காதது, பிரச்சார வியூகங்களை வகுக்காதது என ராகுலின் அனுபவமில்லாத, முதிர்ச்சியற்ற அரசியலே இவ்வளவு பெரிய தோல்விக்கு காரணமாக அமைந்தது என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x