

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம், பொதுமக்களின் சமூக விலகளை தொடர்ந்திடும் வகையில் நடமாடும் பரிசோதனை மையத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பயணம் மேற்கொண்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சுகாதாரக் குழுவின் மருத்துவர்கள் மூலம் கண்டறியப்பட்டவர்கள் என காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்டக் காரணங்களால் மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்கும் வகையில், அவரவர் பகுதியிலேயே சளி மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்யும் வகையில் இந்த நடமாடும் பரிசோதனை மையம் செயல்படுகிறது. இந்த பரிசோதனை மையத்தை மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா நேற்று தொடங்கிவைத்தார்.
இந்த நடமாடும் பரிசோதனை மையத்தின் மூலம் ரேபிட் டெஸ்ட் கிட்டைக் கொண்டு, கரோனா அறிகுறி உள்ளவர்களை 15 நிமிடத்தில் நோய் தொற்றுக் குறித்து கண்டறிய முடியும். ஆனால் இதுவரை ரேபிட் டெஸ்ட் கிட் சுகாதாரத் துறைக்கு வந்தடையாததால், தற்போதைக்கு கரோனா அறிகுறி உள்ளவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகளை அவர்களது சேகரித்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவருகிறோம்.
இதன்மூலம் தொற்று இருக்கிறதா இல்லையா என்பவர் சந்தேகத்தின் பேரில் மருத்துவமனைக்கு வருவதை தவிர்த்து, அவரது வீட்டிலேயே பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால், தொற்று பரவுதலை தடுக்க முடியும் என்றார் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் பொற்கொடி.