

திருப்பூரில் தங்கியுள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் சாப்பிட உணவின்றி, தங்க இடமும் இன்றி அவதிப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சி 36-வது வார்டு செட்டிபாளையம் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த 40 குடும்பத்தினர் உட்பட சுமார் 60 பேர் அப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அவர்களுக்கு வேலை மற்றும் உணவின்றி மிகுந்த அவதிக்கு ஆளாகி வருவதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். திருப்பூரில் தங்கியுள்ள வடமாநிலத் தொழிலாளர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து தருகிறது. இவர்களின் நிலையையும் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.
அதேபோல் பெருமாநல்லூர் அருகே முட்டியங்கிணறு பகுதியில், ஒடிசா மாநிலத் தொழிலாளர்கள் 30 பேர், அப்பகுதியில் தங்கியிருந்தனர். தற்போது ஊரடங்கு உத்தரவால் அவர்கள் வேலையின்றி இருந்தனர். இந்நிலையில் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாகவும், அவர்கள் வேறு எங்கும் தங்க இடமின்றி, அங்குள்ள மரத்தடியில் தங்கியிருப்பதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.
திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் கூறியதாவது: இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.