Published : 12 Apr 2020 03:31 PM
Last Updated : 12 Apr 2020 03:31 PM

தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பொருட்களை நேரடியாக மக்களுக்கு வழங்க தடை: அரசிடம் அளிக்கலாம்: தமிழக அரசு 

தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பிற அமைப்புகளைச் சார்ந்த அனைவரும், ஊரடங்கு அமலில் உள்ள இத்தருணத்தில் பொருட்களை நேரடியாக மக்களுக்கு வழங்கக்கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

“கரோனா தொற்றுநோய் பரவுவதை தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சில மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள், மக்களுக்கு உதவுவதாக கூறிக்கொண்டு , சமைத்த உணவையும், பொருட்களையும் விநியோகம் செய்வதாக ஊடகங்கள் மூலமாக தெரியவருகிறது.

மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்த்து, அதன் மூலம் சமூக இடைவெளியை பின்பற்றி தொற்று நோய் பரவுவதை தடுக்கவே, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டப்படியும், குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144-ன் படியும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், அத்தியாவசியமான பொருட்களுக்கு மட்டும், சில குறிப்பிட்ட நேரங்களில் தனித்தனியாக சென்று, சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா நோய் தொற்று நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய விரும்பும் நபர்களும், பல்வேறு அமைப்புகளும் வழங்க விரும்பும் நிதியை, முதல்வர் நிவாரண நிதிக்கும், பொருட்களாக வழங்க விரும்பினால், அதை சென்னை மாநகரத்தில் மாநகர ஆணையரிடமும், மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும் வழங்க ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

பெறப்படும் இத்தகைய பொருட்களை, சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் கண்காணிப்பில் முதியோர்களுக்கும், ஆதரவற்றோர்களுக்கும், சமூக சமையல் கூடங்களில் சமைத்து உணவு வழங்கவும், தேவைப்படும் ஏழை குடும்பங்களுக்கு பொருட்களாக வழங்கவும், உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில நபர்களும் சில அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளுக்கு புறம்பாக, பல்வேறு இடங்களில் உணவு பொருட்களையும் அல்லது அத்தியாவசிய சமையல் பொருட்களையும் நேரடியாக வழங்குவது, தடை உத்தரவை மீறும் செயலாகும்.

இதுபோன்ற கட்டுப்பாடற்ற நடவடிக்கைகளால், நோய் தொற்று பரவ இச்செயல்கள் வழிவகுக்கும். எனவே, இத்தகைய தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பிற அமைப்புகளைச் சார்ந்த அனைவரும், ஊரடங்கு அமலில் உள்ள இத்தருணத்தில் பொருட்களை நேரடியாக மக்களுக்கு வழங்கி, நோய் தொற்றுக்கு வழிவகுப்பதை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அவ்வாறு உதவி செய்ய விரும்பினால், பொருட்களை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடமோ அல்லது மாநகராட்சியாக இருந்தால் மாநகராட்சி ஆணையரிடமோ, நகராட்சியாக இருந்தால் அந்தந்த நகராட்சி ஆணையரிடமோ, பேரூராட்சியாக இருந்தால் செயல் அலுவலரிடமோ அல்லது ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலரிடமோ வழங்கலாம்.

அவர்கள் அதை ஏழை எளிய மக்களுக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள். எனவே, இதற்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பும் நல்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த அறிவுரைகளை மீறி யாரேனும் செயல்பட்டால், அரசின் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கருதி, அவர்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கையை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர்களும், காவல் துறை அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x