

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, போச்சம்பள்ளி, காவேரிப்பட்ட ணம், ராயக்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப் பளவில் செண்டுமல்லி சாகுபடி செய்யப் படுகிறது. நிகழாண்டில், கடந்த பிப்ரவரி மாதம் முதலே செண்டுமல்லி பூக்கள் விலை வீழ்ச்சியடைய தொடங்கியது.
இருப்பினும் யுகாதி பண்டிகைக்கு பூக்கள் விற்பனை அதிகரிக்கும் என்பதால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் செண்டுமல்லி சாகுபடி மேற்கொண்டனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டதால், யுகாதி பண்டிகை நேரத்தில் பூக்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், சந்தைக்கு கொண்டு செல்லப்பட்ட பூக்கள் விற்பனையாகாமல் டன் கணக்கில் குப்பையில் கொட்டப்பட்டன. தற்போது, தொழிலாளர்களுக்கு அறுவடை கூலி கொடுக்க முடியாததால், விவசாயிகள் பூக்களுடன் செடிகளை அழித்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது, ‘‘ஊரடங்கு உத்தரவு அமலாக்கப் பட்டதால் மலர் சந்தைகள் மூடப்பட்டன. பூக்கள் விற்பனை தடைபட்டுள்ளது. பூக்களைப் பறித்து வீணாக குப்பையில் வீசும் நிலை ஏற்பட்டது. அறுவடை கூலி கூட கொடுக்க முடியாததால், பலர் டிராக்டர் மூலம் பூக்களுடன் தோட்டத்தை அழித்து வருகின்றனர். எனவே, அரசு தோட்டக்கலைத்துறை அலுவலர் கள் ஆய்வு மேற்கொண்டு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்,’’ என்றனர்.