

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களிடம் ரத்தம், சளி மாதிரிகளை அவர்களது பகுதிகளுக்கே சென்று சேரிக்கும் வகையில் நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு மூதாட்டி உயிரிழந்துள்ளார். மற்ற 23 பேரும் தூத்துக்குடி, திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த 24 பேரும் வசித்து வந்த தூத்துக்குடி போல்டன்புரம், காயல்பட்டினம், பேட்மாநகரம், அய்யனாரூத்து, தங்கம்மாள்புரம், ஆத்தூர், ஹேம்லாபாத் ஆகிய 7 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, ஏறத்தாழ 52 ஆயிரம் வீடுகளில் இருக்கும் மக்கள் வெளியே வராதபடி சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தன்னார்வலர்கள் மூலம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் கரோனா தொற்று பரிசோதனைக்காக ரத்தம் மற்றும் சளி மாதிரிகளை, அவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று சேகரிக்கும் வகையில் நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் ஒன்றை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த வாகனம் மூலம் மாதிரி சேகரிப்பு நேற்று தொடங்கியது. தூத்துக்குடி போல்டன்புரம் பகுதியில் ஒரு பெண்ணுக்கு நடமாடும் வாகனத்தில் மாதிரி சேகரிக்கப்பட்டதை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், சார் ஆட்சியர் சிம்ரான் ஜித் சிங் கலோன், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் கிருஷ்ணலீலா, மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
ரத்தம் மற்றும் சளி மாதிரி சேகரிப்புக்கான உபகரணம் இந்த வாகனத்திலேயே இருக்கும். மாதிரி சேகரிக்கும் பணியாளருக்கும், அறிகுறி உள்ள நபருக்கும் இடையே கண்ணாடி தடுப்பு இருக்கும்.
இதில் இருக்கும் ஓட்டை வழியாக பணியாளர் கையை மட்டும் வெளியே விட்டு மாதிரியை சேகரிக்கலாம். இதன் மூலம் அந்த பணியாளர் முழு கவச உடை அணிய தேவையில்லை. கையுறை அணிந்திருந்தால் மட்டும் போதும். இந்த வாகனம் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட 7 இடங்களுக்கும் சென்று மாதிரிகள் சேகரிக்கப்படவுள்ளன. தேவைப்பட்டால் கூடுதலாக ஒரு வாகனமும் ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்