

தென்காசி புதுமனை 2-வது தெருவைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு சளி, மூச்சுத்திணறல் இருந்ததால் தென்காசி அரசு மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார்.
இதனால், அவருக்கு கரோனா அறிகுறியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், தென்காசி புதுமனைத் தெரு மற்றும் அருகில் உள்ள 5 தெருக்களில் வெளியாட்கள் யாரும் உள்ளே செல்ல தடை விதித்து, பிளீச்சிங் பவுடர் தூவுதல், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதாரப் பணிகள் நடைபெற்றது.
இதனால், தங்கள் பகுதியைச் சேர்ந்தவருக்கு கரோனா பாதிப்பு இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டதால், பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இன்று 2-வது நாளாக கிருமிநாசினி தெளித்தல், வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து, யாருக்காவது காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவருக்கு கரோனா பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் முன்னெச்சரிக்கையாக அப்பகுதி முழுவதும் தூய்மைப் பணி, கிருமிநாசினி தெளிப்பு பணிகள் நடைபெற்றது. அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை” என்றனர்.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரானா தொற்று தடுப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் அருண் சுந்தா் தயாளன் தலைமை வகித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணா சிங், மாவட்ட வருவாய் அலுவலா் கல்பனா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மரகதநாதன், கோட்டாச்சியா் பழனிகுமாா் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.