

தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தலைமைச் செயலாளர் சண்முகம் அளித்த பேட்டி:
“47,057 பேர் தனிமைப்படுத்துதலில் உள்ளனர். ஒரு ஆய்வகத்துக்கு கூடுதலாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை செய்யப்பட்ட மொத்த பரிசோதனை 9,527. தொற்று உறுதியானவர்கள் நேற்றைய நிலவரம் 911. இன்று மேலும் 58 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று உறுதியான 58 பேரில் 4 பேர் வெளியிடங்களில் பயணம் செய்ததால் நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள். மீதமுள்ளவர்கள் தொற்று பாதிப்பில் உள்ளவர்களுடன் ஏதோ ஒருவகையில் தொடர்பில் இருந்தவர்கள். மேலும் 459 நபர்களுக்கு முடிவுகளை எதிர்பார்த்துள்ளோம். கரோனா வைரஸால் இன்று ஒருவர் ஈரோட்டில் இறந்ததால் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
24 லட்சம் கட்டிடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. ரேபிட் கிட் சோதனை வேகமாக அதிக அளவு மக்களை ஸ்க்ரீன் செய்வதற்கு பயன்படுவது. நாம் முக்கியமாக யோசிப்பது பிசிஆர் ஆய்வுதான். அது போதுமான அளவு உள்ளது. ஏற்கெனவே 12 ஆய்வகங்கள் அரசு சார்பில் செயல்படுகின்றன. இன்னும் 3 ஆய்வகங்களுக்கு விரைவில் அனுமதி கிடைத்துவிடும். தனியார் ஆய்வகங்கள் 7 உள்ளன.
இன்று வரை தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளவர்கள், சிகிச்சையில் உள்ளவர்களுக்கான ஆய்வை அரசுதான் செய்து வருகிறது. வசதி உள்ளவர்கள் தனியார் ஆய்வகங்களில் செய்து வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சைக்காக கோரிக்கை வந்துள்ளது. அதுகுறித்தும் முதல்வர் ஆலோசித்து வருகிறார்.
ஆய்வகங்களுக்கான அனுமதி தற்போது தருமபுரி மருத்துவமனைக்குக் கிடைத்துள்ளது. தஞ்சாவூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மருத்துவமனைகளுக்காகக் காத்திருக்கிறோம்.
விவசாயத்தைப் பொறுத்தவரை ஒருவார காலமாக பேசினோம். விவசாயிகள் அறுவடை செய்யக்கூடிய நிலங்களில் அவர்களால் விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ள பொருட்களை மொத்தமாக சேமிப்பு மையத்துக்குக் கொண்டு வரும் முயற்சி செய்யப்படுகிறது.
விவசாயிகளின் பொருட்களைச் சேமிப்புக் கிடங்கில் வைத்து அதன் மதிப்பில் 50 சதவீதத்தை அரசு அவர்களுக்கு கடனாகக் கொடுத்துவிடும். பின்னர் அனைத்தும் சரியான பின்னர் விற்பனை செய்து மீதமுள்ள பணத்தைக் கொடுக்க முடிவெடுத்துள்ளோம்.
தற்போது நம்மிடம் 29,000 படுக்கைகள் தயாராக உள்ளன. நமக்குப் பெரிய சவால்கள் இல்லை. மத்திய அரசு கரோனா நோயாளிகளை மைல்ட், மாடரேட், சிவியர் என மூன்றாகப் பிரிக்கிறார்கள். சிவியர் கேஸை ஐசியுவில் அனுமதிக்க வேண்டும். மாடரேட் நோயாளிகளை மருத்துவமனையிலும், மைல்ட் நோயாளிகளை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள்.
ஆனால் நாம் மைல்ட் நோயாளிகளையும் மருத்துவமனையிலேயே அனுமதித்து சிகிச்சை அளிக்கிறோம். ஒருவேளை வருங்காலத்தில் எண்ணிக்கை அதிகமாகி ரத்த அழுத்தம் அதிகமானால் அதற்கும் நம்மைத் தயார்படுத்திக்கொள்ள அதற்கென்று ஆய்வு செய்ய ஒரு வல்லுநர் குழு அமைத்துள்ளோம். அவர்கள் தமிழ்நாடு முழுதும் மாவட்டம் முழுவதும் உள்ள வசதிகள் அடிப்படையில் ஹாஸ்டல்கள், ஹோட்டல்கள், கட்டிடங்கள் உள்ளிட்டவற்றைக் கண்டறிந்து வைத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 3 லட்சம் படுக்கைகளைத் தயார் செய்து வைத்துள்ளார்கள். எபிடெமிக் ப்ரொஜக்ஷன் குரூப் எனும் குழு உள்ளது. அவர்கள் அவ்வப்போது எழும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து அவ்வப்போது வரும் பிரச்சினைகளுக்கு ஏற்ப முடிவு செய்வார்கள். தேவையான மருந்து மாத்திரைகளும் உள்ளன.
ஆய்வை மிகவும் தீவிரப்படுத்த வேண்டும் அரசு முடிவெடுத்துச் செயல்படுகிறது. நாம் செய்யும் சோதனை பிசிஆர் சோதனை. அதற்கத் தேவையான 14,000 கருவிகள் உள்ளன. அதனால் எந்தப் பிரச்சினையும் வர வாய்ப்பில்லை. பிசிஆர் கருவிகள் தாமதமாவது பற்றி கவலைப்பட வேண்டாம். அது வரும்போது பெரிய அளவில் ஸ்க்ரீனிங் டெஸ்ட் செய்வோம். பிசிஆர் டெஸ்ட் மூலம் தற்போதுள்ள நபர்களுக்குச் சோதனை நடத்தி அதன் பின்னர் தொடர்பு மூலம் தொற்று உள்ள நபர்களை சோதனை செய்கிறோம்''.
இவ்வாறு தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.