

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 316 வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் 10,057 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரத்தில் உணவகங்களில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கியபின் ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாவட்டத்தில் இதுவரை 45 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 2 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதனையடுத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 பேரில் 11 பேருக்கு கரோனா தொற்று இல்லை, 6 பேருக்கு பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை. மக்கள் அரசின் அறிவுரைகளை அலட்சியப்படுத்தாமல் நடக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அமைப்புசாரா ஆட்டோ ஓட்டுநர்கள் 726 பேர், கட்டுமானத் தொழிலாளர்கள் 9015 பேர், வெளிமாநில கட்டுமானத் தொழிலாளர்கள 316 பேர் என 10,057 பேருக்கு ரூ.1,000 மற்றும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ எண்ணெய் ஆகியவை, அரசின் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
இதுமட்டுமின்றி மாவட்டத்தில் உணவகங்களில் 2,783 வெளிமாநில தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். இதில் இன்று 106 பேருக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ எண்ணெய் வழங்கப்படுகிறது.
மேலும் உடல் உழைப்பு அமைப்புசாரா தொழிலாளர்கள் 18,634 பேருக்கு அரசு ரூ.1000 நிவாரண நிதி ஒதுக்கியுள்ளது. விரைவில் இந்நிதி வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
கரோனா அறிகுறி தகவல்:
கடந்த 2-ம் தேதி சென்னையில் கரோனா தொற்றால் உயிரிழந்து சொந்த ஊரான கீழக்கரையில் 71 வயதுடைய தொழிலதிபர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அடக்க நிகழ்வில் பங்கேற்ற 200-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அதனால் கீழக்கரை மக்கள் அச்சப்படாமல் தங்களுக்கு கரோனா அறிகுறி ஏதும் தென்பட்டால் உடனடியாக சுகாதாரத்துறையினர் அல்லது சார் ஆட்சியருக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவிக்கலாம் என ராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்தார்.