தோவாளை மலர் சந்தையை 6 மணி நேரம் திறக்க அரசு அனுமதி: கரோனா சமூக பரவலைத் தடுக்க ஊரடங்கு முடியும் வரை திறப்பதில்லை என பூ வியாபாரிகள் முடிவு

தோவாளை மலர் சந்தையை 6 மணி நேரம் திறக்க அரசு அனுமதி: கரோனா சமூக பரவலைத் தடுக்க ஊரடங்கு முடியும் வரை திறப்பதில்லை என பூ வியாபாரிகள் முடிவு
Updated on
2 min read

தோவாளை மலர் சந்தையை 6 மணி நேரம் திறந்து பூக்கள் விற்பனை செய்ய அரசு அனுமதித்துள்ள நிலையில் கரோனா வைரசின் சமூக பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு முடியும் வரை மலர் சந்தையை திறப்பதில்லை என பூ வியபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தை தமிழகம் மட்டுமின்றி கேரளாவின் மலர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. கரோனா பாதிப்பை தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருப்பதால் தோவாளை மலர் சந்தை பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது.

இதனால் இதை நம்பிய மலர் விவசாயிகள், வியாபாரிகள், பூ பறிக்கும் தொழிலாளர்கள், பூக்கட்டுவோர் என ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

இதனால் மலர் விவசாயம், பூ வியாபாரத்தை காக்கும் வகையில் தோவாளை மலர் சந்தை சமூக இடைவெளியுடன் செயல்பட நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம், தமிழக முதல்வர் பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்தார்.

இதைத்தொடர்ந்து தோவாளை மலர் சந்தையில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை 6 மணி நேரம் சமூக இடைவெளி விட்டு அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பூ வியாபாரம் செய்து கொள்ளலாம் என தமிழக முதல்வர் பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் கரோனா வைரஸ் பரவி வருவதை தொடர்ந்து பூ வியாபாரிகள் சங்க கூட்டம் அதன் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பூ வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று தோவாளை மலர் சந்தையை 6 மணி நேரம் செயல்பட அனுமதி அளித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும் மலர் வணிக வளாகத்தை திறந்தால் குமரி மட்டுமின்றி பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பூக்களும், விவசாயிகள், வியாபாரிகள் சந்தைக்கு வருவர். இதனால் கரோனா வைரஸ் தொற்று அபாயம் உள்ளது.

அத்துடன் மலர் சந்தையை பொறுத்தவரை சமூக இடைவெளி விட்டு வியாபாரம் நடத்துவது மிகவும் சிரமம் எனவே சமூக நலன் கருதியும், பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் தொற்றாமல் நடவடிக்கை எடுக்கும் வகையிலும் ஊரடங்கு உத்தரவு நீங்கும் வரை தோவாளை மலர் சந்தையில் பூ வியாபரம் செய்வதில்லை எனவும், கோயில்களில் ஆகம முறைப்படி நடைபெறும் பூஜை, மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மலர் வியாபாரிகள் நேரடியாகவே வியாபாரிகளின் வீடுகளுக்கு மலர்களை வழங்குவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in