

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்படுவது குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று பேட்டி அளித்தார்.
தமிழகத்தில் ஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீட்டிப்பது குறித்து நிபுணர் குழு பரிந்துரைத்திருந்தது. பிரதமருடன் நடத்திய ஆலோசனையில் பல மாநில முதல்வர்களும் 15 நாட்கள் ஊரடங்கை நீட்டிக்க வலியுறுத்தியிருந்தனர்.
பஞ்சாப், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துவிட்டன. தமிழகத்தின் நிலை குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“பாரதப் பிரதமர் பல்வேறு முதல்வர்களுடன் காணொலிக் காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார். பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களும் கரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் தற்போது செயல்பட்டு வரும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் நாம் எடுக்கும் முயற்சி வெற்றி பெறாது என்று தெரிவித்தனர்.
நம்முடைய முதல்வரும் பல்வேறு நிபுணர்கள் அளித்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் இந்த ஊரடங்கை மேலும் இரண்டு வார காலத்துக்காகவாது நீட்டிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதைக் கவனமாக கேட்டுக்கொண்ட பிரதமர், பல்வேறு ஆலோசனைகளைத் தெரிவித்தார்.
அதில் ஆரோக்கிய சேது செயலியைப் பரவலாகக் கொண்டு செல்லவேண்டும் என்றும், தனிமைப்படுத்தலில் பச்சை மஞ்சள் சிவப்பு முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் பேச உள்ளார். இந்நிலையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் கூடியது. தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவுதல் குறித்தும், வல்லுநர் தெரிவித்த கருத்து அடிப்படையிலும், ஊரடங்கு குறித்து முதல்வர் தகவல் தெரிவித்தார்.
இதுபோன்ற நிலையில் ஒரு மாநிலம் மட்டும் தனித்து நின்று இதுபோன்று ஊரடங்கை அமல்படுத்தினால் பயன் தராது. நாடு முழுவதும் இதற்கான முடிவை பிரதமர் அறிவித்தால் அல்லது நாடு முழுவதும் எடுக்கும் முடிவை தமிழகமும் ஏற்றுக்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது. பிரதமர் அறிவிக்கும் முடிவின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்.
தமிழகம் இரண்டாவது பெரிய எண்ணிக்கை உள்ள மாநிலம். ஆகவே, தனியாக எந்த முடிவும் எடுக்க முடியாது. நமக்கு 15-ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு உள்ளது. அதனால் அவசரம் ஒன்றுமில்லை. அதனால் பிரதமர் அறிவிக்கும் முடிவை ஏற்றுக்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.
21 நாட்கள் ஊரடங்குக்கு ஒத்துழைக்கும் பொதுமக்களுக்கு அமைச்சரவை நன்றி தெரிவித்தது. அதேபோன்று கரோனா நோய்த்தொற்று நடவடிக்கையில் முன்னிலையில் நின்று பாடுபடும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட அனைவரின் சேவையையும் அமைச்சரவை பாராட்டியது.
ஊரடங்கு நீட்டிப்பது பற்றி முடிவெடுக்கும்போது அடுத்தடுத்த நடவடிக்கை குறித்து முதல்வர் தெரிவிப்பார்''.
இவ்வாறு தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.