''சேவை செய்ய மனசுதானே வேணும்... மண்ணீரலா வேணும்?''- கோமாவிலிருந்து மீண்டவரின் கரோனா சேவை 

''சேவை செய்ய மனசுதானே வேணும்... மண்ணீரலா வேணும்?''- கோமாவிலிருந்து மீண்டவரின் கரோனா சேவை 
Updated on
1 min read

பிரதீஷைச் சந்தித்த தருணத்தில் என்னையும் அறியாமல் ஆச்சரியம் தொற்றிக் கொண்டது. முன்பொருமுறை காமதேனு வார இதழில் அவரைப் பற்றி எழுதுவதற்காகச் சந்தித்திருந்தேன். விபத்து ஒன்றில் சிக்கி மண்ணீரலை இழந்து, கோமா நிலைக்குப் போய்த் திரும்பிய பிரதீஷ் நீராதாரப் புனரமைப்பில் ஈடுபடுவது குறித்துக் கேள்விப்பட்டு சந்திக்கப் போனேன். இதோ இப்போது, கரோனா ஊரடங்கு காலத்தில் எளிய மக்களுக்காகத் தானே உணவு சமைத்து, ஆதரவில்லாதோருக்குக் கொடுத்து வருகிறார் பிரதீஷ்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களை கரோனா வெகுவாகப் பாதிக்கும் எனப் பலரும் எச்சரித்துக் கொண்டிருக்கும் நிலையில், பிரதீஷ் மண்ணீரலே இல்லாவிட்டாலும் மனம் நிரம்ப சேவை குணத்தோடு ஊரடங்கு காலத்திலும் பயணித்துக் கொண்டிருக்கிறார். உணவு கொடுப்பதோடு நில்லாமல் தூய்மைப் பணியாளர் அவதாரம் எடுத்து சாலையோரம் பிளீச்சிங் பவுடர் போடுவது முதல் சுத்தம் செய்வது வரை ஈடுபட்டு வருகிறார்.

அவரிடம் பேசினேன். “தக்கலை பக்கத்துல ஆற்றுவிளாகம் என்னோட ஊர். அப்பா கனகராஜ் சத்துணவு அமைப்பாளரா இருந்தாங்க. குடும்பத்தின் வறுமையான சூழலால பிளஸ் 2 முடிச்சதும் படிப்பை நிப்பாட்டிட்டு கட்டிட வேலைக்குப் போயிட்டேன். சின்ன வயசுல இருந்தே நாட்டுக்கு சேவை செய்யணும்னு ஆசை. ரெண்டு தடவை ஆர்மி செலக்ஷனுக்கும் போனேன். ஆனா தேர்வாக முடியல.

சென்ட்ரிங் வேலையில இருந்தப்ப ஒருநாள் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்துட்டேன். மேல இருந்து கீழே விழுந்ததுல மண்ணீரல் உருத்தெரியாம போயிடுச்சு. வயித்துக்குள்ள ரத்தம் பயங்கரமா வந்திருந்தாலும் ஒரு சொட்டுகூட வெளியில் வரல. 3 லிட்டர் ரத்தம் ஒரே பகுதியில் கட்டியா நின்னுருக்கு. ஒருமாசத்துக்கு மேல கோமா நிலையில்தான் இருந்தேன். ரெண்டு மாசம் கழிச்சுதான் ஆஸ்பத்திரியில் இருந்தே வீட்டுக்கு வந்தேன்.

தலையிலும் அங்கங்கே ரத்தக்கசிவு இருந்ததால அதையெல்லாம் சரிசெய்ய கழுத்துல துவாரம் போட்டாங்க. இயல்பாக இருந்த பேச்சுத்திறனும் இதனால போயிடுச்சு” எனத் தனது கடந்த காலத்தை பிரதீஷ் சொல்லச் சொல்ல அதைப் புரிந்துகொள்வதே சவாலான விஷயமாக இருந்தது. அந்த அளவுக்கு அவரது பேச்சுத்திறன் பாதிக்கப்பட்டு இருந்தது.

உடலால் இத்தனை இடர்களைச் சுமந்து வாழும் பிரதீஷ், கோயிலில் தற்காலிகப் பணியாளராக இருக்கிறார். இதோ இந்த கரோனா காலத்தில் தன் கஷ்டமான வாழ்சூழலுக்கு மத்தியில் தானே சமைத்து ஏழைகளுக்கு உணவு கொடுக்கிறார். தன் கையில் பணம் இல்லாதபோது நண்பர் குழுக்கள் தரும் உணவைப் பெற்றுக்கொண்டு ஏழைகளைத் தேடிக் கொடுக்கிறார். முகத்தில் துணியை இறுகக்கட்டிக் கொண்டு வீதி, வீதியாகப் போய் பிளீச்சிங் பவுடர் போடுகிறார்.

மண்ணீரலே இல்லாத இந்த மனிதனின் சேவை கரோனா ஊரடங்கு காலத்தில் வியக்க வைக்கிறது. இதைப் பற்றி பிரதீஷிடம் கேட்டால், “சேவை செய்ய மனசுதானே சார் வேணும்... மண்ணீரலா வேணும்?”என்கிறார் சிரித்துக்கொண்டே.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in