Published : 11 Apr 2020 04:04 PM
Last Updated : 11 Apr 2020 04:04 PM

சென்னையில் தெரு நாய்களுக்கு பால், பிஸ்கெட்: கருணை காட்டும் பாஜக மீனவரணி

சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள மீனவர் குப்பம் பகுதியில் வசிக்கும் மீனவக் குடும்பங்களுக்கு பாஜக மீனவர் அணி சார்பில் இன்று மதிய உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

ஊரடங்கு அமலில் இருப்பதால் அடித்தட்டு மக்களும் கூலித் தொழிலாளிகளும் அன்றாட உணவுத் தேவைகளுக்காக பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். சென்னையில் இவர்களில் ஒரு சிறு பகுதியினருக்கு ஒரு வேளையாவது உணவு அளிக்கும் முயற்சியை முன்னெடுத்துச் செய்து வருகிறது பாஜக மீனவரணி.

இதன்படி கடந்த 31-ம் தேதியிலிருந்து தினம் ஒரு பகுதியிலுள்ள மீனவக் குடும்பங்களுக்கு மதிய உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 12-வது நாளாக இன்று மதியம் எண்ணூர் மீனவக் குப்பத்தில் உள்ள மீனவக் குடும்பங்களுக்கு மதிய உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பாஜக மீனவரணி மாநிலத் தலைவர் சதீஷ்குமார், “ஊரடங்கு அமலால் அடித்தட்டு மக்கள் உணவுக்காக ரொம்பவே அல்லாடுகிறார்கள். அதிலும் குறிப்பாக, எங்களது மீனவ சமூகத்து மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகி வருகிறார்கள். இவர்களில் ஒரு சிறு பகுதியினரின் பசியையாவது போக்கமுடியுமா என்று நாங்கள் சிந்தித்தோம். அதற்கு செயல் வடிவம் கொடுத்து தினமும் ஒரு மீனவர் குப்பத்துக்கு மதிய உணவு அளித்து வருகிறோம்.

இதற்காக, சாம்பார் சாதம், தயிர் சாதம், லெமன் சாதம்,வெஜ் பிரியாணி என ஒவ்வொரு நாளும் ஒரு வகை சாதத்தை தயார் செய்கிறோம். தினமும் 150 முதல் 200 பொட்டலங்களைத் தயார் செய்து மீனவக் குப்பங்களுக்கு வழங்கி வருகிறோம். மீனவ மக்களுக்கு மட்டுமல்லாது உயிர்காக்கும் பணியில் இருக்கும் போலீஸார், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கும் உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறோம்.

மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கும் போதுதான் இன்னொரு விஷயமும் தெரியவந்தது. தெருவோரத்தில் கிடைத்ததைத் தின்று உயிர்வாழும் தெரு நாய்களுக்கும் இப்போது உணவு கிடைக்கவில்லை. அவையும் உணவுக்காக அல்லாடுகின்றன. இதுவும் எங்களது கவனத்துக்கு வந்ததால் நாய்கள் கூட்டமாகத் திரியும் இடங்களில் தேவையான பிஸ்கெட், பால் ஆகியவற்றை வாங்கி வைத்து அவற்றின் பசியையும் போக்கி வருகிறோம். சமூக ஆர்வலரும் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஆர்.முரளீதரனும் இந்தப் பணிகளில் எங்களோடு கை கோத்திருக்கிறார்” என்றார்.

இதனிடையே, நேற்று சென்னை எழுப்பூர் பாந்தியன் சாலை ரவுண்டானாவில் கரோனா அபாயம் குறித்து சாலையில் ஓவியம் வரைந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது பாஜக மீனவரணி. தொடர்ந்து சென்னையில் மேலும் பல முக்கிய இடங்களிலும் இதுபோன்ற விழிப்புணர்வு ஓவியங்களை வரையவிருப்பதாக பாஜக மீனவரணியினர் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x