

ராஜபாளையம் அருகே 144 தடை உத்தரவை மீறி தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித் திரிபவர்களை கரோனா வைரஸ் பிடிப்பது போல் பிடித்து பொதுமக்களுக்கு சேத்தூர் காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சேத்தூர், தேவதானம், கோவிலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா வைரஸ் பாதிப்பை எடுத்துரைக்கும் விதமாக இம்முயற்சியை காவல்துறையினர் மேற்கொண்டனர்.
சேத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் காளிராஜ் ஆகியோர் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு செய்தனர்.
எந்தவித அத்தியாவசியப் பொருட்கள் வாங்காமலும், தேவையின்றி சுற்றித் திரிபவர்களின் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி, கரோனா அவர்களை அச்சுறுத்தும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டு ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றித்திரிய மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வைத்தனர்.
தெருக்களில் கரோனா வைரஸ் போன்ற உருவ பொம்மையைப் பயன்படுத்தி கரோனா தாக்கும் என்பது போன்று மக்களை விரட்டிச் சென்று பிடிப்பது போல் ஏற்பாடு செய்த நபர் தெருக்களில் சுற்றி திரிந்த மக்களை பிடித்தபோது மக்கள் தெருவை விட்டு அலறி அடித்து ஓடினர்.
போலீஸார் வீடுகளை விட்டு சாலைகளுக்கு 144 தடையை மீறி வரக்கூடாது என அவர்களுக்கு அறிவுரை வழங்கி உறுதிமொழி எடுத்த பின்பு இலவச முகக் கவசங்களை கொடுத்து அனுப்பி வைத்தனர்.