Published : 31 Aug 2015 03:36 PM
Last Updated : 31 Aug 2015 03:36 PM

அப்துல் கலாமுடன் கலந்துரையாடிய பள்ளி மாணவி உருக்கம்

கோவில்பட்டியில் இலக்கிய உலா அமைப்பு சார்பில் நடந்த பவுர்ணமி நூல்வலம் நிகழ்ச்சியில் அப்துல்கலாமுடன் கலந்துரையாடிய நிகழ்வை பள்ளி மாணவி உருக்கமாக எடுத்துரைத்தார்.

கோவில்பட்டியில் நடைபெற்ற பவுர்ணமி நூல் வலம் நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் நூல்களில் உள்ள கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இலக்கிய உலா ரவீந்தர் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் உலகநாதன், எழுத்தாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். இலக்கிய உலா இயக்குநர் பிரபாகரன் வரவேற்றார்.

ரோட்டரி சங்கத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி, கருத்துக்களை பதிவு செய்தார். கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர் ஜெயசித்ராதேவி, ஹனுஷா பிரியதர்ஷினி ஆகியோர் பேச்சு வாயிலாகவும், முத்துலட்சுமி, ரோஷினி ஆகியோர் கட்டுரை வாயிலாகவும், கார்த்திகா கவிதை வாயிலாகவும் அப்துல்கலாம் நூல்களின் கருத்துக்களை பரிமாறினர்.

கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவி மேனகா கூறும்போது, ‘நான் 7-ம் வகுப்பு படிக்கும் போது தூத்துக்குடியில் அப்துல் கலாம்- மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. அனைவரும் அப்துல்கலாமிடம் பகிர்ந்து கொள்ள வினாக்களுடன் தயாராக இருந்தோம். நிகழ்வு தொடங்க காலதாமதம் ஏற்பட்டதால் கலாமின் சிறப்புரைக்குப் பின் 5 மாணவர்கள் மட்டும் அவரிடம் நேரடியாக கலந்துரையாட அனுமதிக்கப்பட்டனர். கலந்துரையாடலுக்குப் பின்னர் கலாம் மாணவர்களை நோக்கி ஒரு கேள்வி கேட்டார்.

அதாவது ‘நான் இறந்த பின் என் புகைப்படத்தை பார்த்து உங்கள் அடுத்த தலைமுறைக்கு என்னை எப்படி சுட்டி காண்பிப்பீர்கள்?’ எனக் கேட்டார். மாணவர்கள் அனைவரும் அவரவர் கருத்தை தெரிவித்தனர்.

சற்று அமைதிக்கு பின் நான் எழுந்து நின்று, ‘ஹேண்ட்சம் ஹேர் கட்’ என்று கூறினேன். அவையோர் அனைவரும் சிரித்தனர். உடன் இருந்த ஆசிரியர்கள் என்னை சத்தம் போட்டனர்.

இதைப்பார்த்த கலாம், போலீஸ் அதிகாரியிடம் மைக்கை என்னிடம் கொடுக்கச் சொல்லி மீண்டும் என்னிடம் சொன்னதை சொல்ல சொன்னார். நானும் மீண்டும் அதே வார்த்தையை சொன்னேன்.

பின்னர் அவரிடம், ‘நீங்கள் அப்துல்கலாமாக ஆவதற்கு எவ்வளவு நேரம் உழைத்தீர்கள். நான் உங்களைப் போல் ஆக எவ்வளவு நேரம் உழைக்க வேண்டும்’ என்றேன்.

அதற்கு அவர், ‘ நான் நாளொன்றுக்கு 18 மணி நேரம் உழைத்தேன். நீ 18 மணி நேரம் 1 நொடி உழைத்தால் சாதிக்கலாம். உன் சிந்தனை வித்தியாசமாக உள்ளது. சிறந்து விளங்குவாய்’ என்று வாழ்த்தினார். ஒவ்வொரு நொடியும் அப்துல்கலாம் என் மனதில் உள்ளார்’ என்றார் மாணவி மேனகா.

நூலகர் பூல்பாண்டி நன்றி கூறினார். காமராஜ் பள்ளி தமிழ் ஆசிரியர் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமுடன் கலந்துரையாடிய நிகழ்வை பகிர்ந்து கொண்ட மாணவி மேனகாவுக்கு, ரோட்டரி சங்கத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி பரிசு வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x