Published : 11 Apr 2020 01:23 PM
Last Updated : 11 Apr 2020 01:23 PM

தமிழகத்தில் நாளையே முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால் கூட மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்: ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

தமிழகத்தில் நாளையே முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால் கூட மக்கள் மது இன்றி மகிழ்ச்சியாக இருப்பார்கள் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஏப்.11) தன் முகநூல் பக்கத்தில், "தமிழ்நாடும், இந்தியாவும் இப்போது மிகவும் நெருக்கடியான, சவாலான காலகட்டத்தைக் கடந்து சென்றுகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் கரோனா வைரஸ் பரவல் குறித்து புதிது புதிதாக வரும் செய்திகள் எனது தூக்கத்தைக் கெடுக்கின்றன. கரோனா வைரஸ் நோய் பரவல் முற்றிலுமாக தடுக்கப்பட்டு விட்டது; வைரஸ் கிருமிகள் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டன என்ற செய்தி வரும்போதுதான் துக்கம் கலையும்; இயல்பான தூக்கம் வரும்.

அப்படிப்பட்டதோர் இரவில் தான் நான் உறங்குவதற்குச் சென்றேன். வழக்கம் போலவே பல்வேறு நிகழ்வுகள் மனதில் நிழலாட உறக்கம் கண்களை விட்டு விலகிச் சென்றது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தூக்கம் கண்களைத் தழுவ, அடுத்த சில நிமிடங்களில் ஒரு கனவு என்னை ஆட்கொண்டது.

அந்தக் கனவில் முதலில் வந்தவர் காந்தி.

தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த காந்தி இந்திய விடுதலைக்காக எந்த அளவுக்குத் தீவிரமாகப் போராடினாரோ, அதே அளவு தீவிரத்துடன் மதுவிலக்குக்காகவும் போராடினார். 1930-ம் ஆண்டில் இந்தியாவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியா முழுவதும் கள்ளுக்கடை மற்றும் சாராயக்கடைகள் முன்பு மறியல் போராட்டங்களை அறிவித்தார் காந்தி.

காந்தி அறிவித்த போராட்டம் வட மாநிலங்களை விட தமிழகத்தில் தான் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அன்றைய சென்னை மாகாணத்தில் மொத்தம் 9,000 சாராயக்கடைகள் இருந்தன. ஆனால், காந்தியின் எதிர்ப்பால் 6,000 கடைகளை ஏலம் எடுக்க எவரும் முன்வரவில்லை.

அதுமட்டுமின்றி, மாவட்ட ஊராட்சிகளும், ஊராட்சி ஒன்றியக் குழுக்களும் தென்னை மற்றும் பனை மரங்களில் கள் இறக்க அனுமதி அளிப்பதில்லை என்று தீர்மானித்தன. கிராமங்களில் மது குடிப்பவர்களை மக்கள் புறக்கணித்தனர். மதுவுக்கு எதிராக காந்தி நடத்திய அந்தப் போராட்டம் தமிழகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.

காந்தியின் இந்தப் போராட்டத்திற்கு முன்பே அவர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் மதுவிலக்குப் போராட்டத்தை 1921-ம் ஆண்டே பெரியார் தமிழகத்தில் சிறப்பாக நடத்தினார். பெரியார் அடிப்படையில் சிக்கனவாதி. எதையும் இழக்க விரும்ப மாட்டார்.

ஆனாலும், தமது குடும்பத்திற்கு சொந்தமான தென்னை மரங்கள் கள் இறக்கப் பயன்படலாம் என்ற அச்சத்தில் 500க்கும் மேற்பட்ட மரங்களை பெரியார் வெட்டிச் சாய்த்தார். தொடர்ந்து நடத்திய போராட்டங்களுக்காக பெரியார் 21.11.1921 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்தக் காட்சியும் எனது கனவில் வந்து சென்றது.

பெரியார் கைதானவுடன் மதுவிலக்குப் போராட்டம் பிசுபிசுத்துவிடும் என்று வெள்ளையர் அரசு நினைத்தது. ஆனால், அதைப் பொய்யாக்கினார் பெரியார். தமக்கு பதிலாக தமது மனைவி நாகம்மையையும், சகோதரி கண்ணம்மையையும் போராட்டத்தில் கலந்துக்கொள்ளச் செய்தார்.

மதுவிலக்குப் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தபோது, அதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக காந்தியுடன் ஆங்கிலேயர்கள் பேச்சு நடத்தினர். அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த காந்தி, "மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை. அது ஈரோட்டில் இரண்டு பெண்களிடம் இருக்கிறது. அவர்களைத்தான் கேட்க வேண்டும். அவர்கள் பாதிக்கப்படும் பெண் இனத்தின் பிரதிநிதிகள் ஆவர்" என்று பெருமையுடன் கூறினார். அந்த அளவுக்கு நாகம்மையும், கண்ணம்மையும் மதுவுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக இருந்தனர்.

மதுவிலக்கை அடைவதில் காந்தியும், பெரியாரும், நாகம்மை மற்றும் கண்ணம்மையும் போராட்டத்தால் சாதித்தவர்கள் என்றால், ராஜாஜியும், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும் அதிகாரத்தால் சாதித்தவர்கள்.

1937-ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை மாகாணத்தின் முதல்வராக பதவியேற்ற ராஜாஜி அடுத்த 100 நாட்களுக்குள், அதாவது அக்டோபர் 1-ம் தேதி முதல் சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினார். அன்றைய சேலம் மாவட்டம் இன்றைய சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். பின்னர் வட ஆற்காடு, இன்றைய ஆந்திராவில் உள்ள சித்தூர், கடப்பா ஆகிய மாவட்டங்களுக்கு மதுவிலக்கை நீட்டித்தார்.

வழக்கம் போலவே மதுக்கடைகளை மூடினால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறி அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டனர். ஆனால், அதைப்பற்றிக் கவலைப்படாத ராஜாஜி மதுவிலக்கை உறுதியாக நடைமுறைப்படுத்தினார். அதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட அப்போது அவர் விற்பனை வரியை அறிமுகப்படுத்தினார்.

இந்திய வரலாற்றில் ஒட்டுமொத்த சென்னை மாகாணத்திலும் மதுவிலக்கைக் கொண்டு வந்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்தான். 1948-ம் ஆண்டில் அவர் மதுவிலக்கைக் கொண்டு வந்தபோது அரசுக்கு ரூ.18 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று அதிகாரிகள் கூறினார்.

ஆனால், ஆண்டுக்கு ரூ.81 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை; அதற்காக மதுவிலக்கைக் கைவிட மாட்டேன் என்று உறுதிபடக் கூறினார். அப்போது அவர் கொண்டு வந்த மதுவிலக்கு தான் 1971-ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. அந்த மதுவிலக்கைத்தான் 1971-ம் ஆண்டில் கருணாநிதி அரசு நீக்கியது.

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அறிவித்த மதுவிலக்கைக் கடைப்பிடிப்பதில் காமராஜர், பக்தவச்சலம் போன்க்ற காங்கிரஸ் தலைவர்களைப் போலவே திமுகவின் முதல் முதல்வரான அண்ணாவும் உறுதியாக இருந்தார். மதுவிலக்கை ரத்து செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டபோது, "மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் தொழுநோயாளியின் கைகளில் இருக்கும் வெண்ணெய்க்குச் சமமானது" என்று கூறி அந்த யோசனையை நிராகரித்து விட்டார்.

தமிழ்நாட்டில் கடந்த 39 ஆண்டுகளாக மதுவிலக்கு கோரிக்கையை நான் எழுப்பி வருகிறேன். அப்போதெல்லாம் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் மதுவுக்கு அடிமையானவர்கள் பாதிக்கப்படுவர்; கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடும் என்றெல்லாம் கூறி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மறுத்து விடுவார்கள் தமிழக ஆட்சியாளர்கள்.

ஆனால், கெட்டதிலும் ஓர் நல்லது என்பதைப் போல கரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது சாத்தியமானது என்பதை நிரூபித்துள்ளது. கடந்த 18 நாட்களாக தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

மதுக்கடைகள் திறக்கப்படாததால் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடவில்லை. தமிழகத்தில் நாளையே முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால் கூட மக்கள் மது இன்றி மகிழ்ச்சியாக இருப்பார்கள். அந்த வகையில் தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த கிடைத்திருக்கும் சிறந்த வாய்ப்பு தான் இந்த ஊரடங்கு என்று கனவில் நினைத்துக்கொண்டிருக்கும் போதே கனவு கலைந்து விழிப்பு வந்து விட்டது.

கண்டது கனவு தான் என்றாலும் கூட அதில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் நிஜம் தானே. முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும் உண்மை தானே.

தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த இப்போது நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் மேற்குறிப்பிடப்பட்ட தலைவர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமியும் இணைய முடியும்.

எது எப்படியாக இருந்தாலும் தமிழ்நாட்டில் மதுவிலக்கை உறுதியான செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற ஓர் உன்னதமான கனவு நிறைவேறுவதற்கு ஏற்ற தருணம் இது!" என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x