Published : 11 Apr 2020 01:14 PM
Last Updated : 11 Apr 2020 01:14 PM

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 84 வயது மூதாட்டி உட்பட 3 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 84 வயது மூதாட்டி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். இதனையடுத்து அவர்கள் 3 பேரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் சென்னை ஆகும். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என சென்னையில்தான் அதிகம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர்.

அதிலும் குறிப்பாக சென்னை மண்டலம் 1 (திருவொற்றியூர்), 5 (ராயபுரம்), 8 (அண்ணாநகர்) உள்ளிட்டவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் கரோனாவால் சென்னை அதிக அளவில் பாதிக்கப்பட்டாலும் ஆறுதல் அளிக்கும் விஷயமாக சிலர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.

இன்று சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 84 வயது மூதாட்டி, 54 வயதுப் பெண், 25 வயது ஆண் சிகிச்சையில் குணமடைந்தனர். சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அவர்கள் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

குடும்பத்தில் மூவருக்கும் கரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை முடிந்து அவர்களுக்கு எடுக்கப்பட்ட மாதிரி சோதனையிலும் உடல் தொற்று இல்லை என்பது உறுதியான நிலையில் இன்று காலையில் 3 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மருத்துவர்கள் வாழ்த்து கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். அவர்களும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

ஏற்கெனவே 72 வயது மூதாட்டி சிகிச்சையில் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட இரண்டு பெண்களும் 50 வயதைக் கடந்தவர்கள். வயதானவர்களை கரோனா பாதித்தால், அவர்கள் உயிர் பிழைப்பது கடினம் எனக் கூறிவந்த நிலையில் இருவரும் சிகிச்சையில் குணமடைந்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x