Last Updated : 11 Apr, 2020 12:26 PM

 

Published : 11 Apr 2020 12:26 PM
Last Updated : 11 Apr 2020 12:26 PM

புதுச்சேரியில் மளிகைப் பொருட்களின் விலை உயர்வு; அச்சத்தால் வாங்கிக் குவிக்கும் மக்கள்

வரத்து குறைவால் புதுச்சேரியில் மளிகைப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் அதிக அளவில் வாங்கும் சூழலும் உள்ளது. போதிய அளவு இருப்பு உள்ளதால் மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என்றும் மளிகைக் கடை உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

புதுச்சேரிக்கு மளிகை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தமிழகத்தில் ஈரோடு, சேலம், தூத்துக்குடி, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் வருகிறது. தற்போது கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வாகனங்கள் வரத்து குறைந்துள்ளது. அங்கு உற்பத்தியும் ஆட்கள் இல்லாததால் நடக்கவில்லை.

இச்சூழலில், புதுச்சேரியில் மளிகை, அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது, ஊரடங்கால் அதிக அளவில் பொருட்கள் வாங்கும் மனோநிலையும் மக்களிடம் அதிகரித்துள்ளது.

கிலோவுக்கு ரூ.100-க்கு விற்ற துவரம் பருப்பு ரூ.110, குண்டு உளுந்து ரூ.110-ல் இருந்து ரூ.125 ஆகவும், பாசி பருப்பு ரூ.115-ல் இருந்து ரூ.125 ஆகவும் அதிகரித்துள்ளது. அதேபோல், பொட்டுக்கடலை ரூ.70-ல் இருந்து ரூ.80 ஆகவும், மிளகாய் ரூ.160-ல் இருந்து ரூ.180 ஆகவும், மல்லி ரூ. 85-ல் இருந்து ரூ.95 ஆகவும், பூண்டு ரூ.200-ல் இருந்து ரூ.225 ஆகவும், புளி ரூ.175-ல் இருந்து 200 ஆகவும், வெல்லம் ரூ.60-ல் இருந்து ரூ.75 ஆகவும் அதிகரித்துள்ளது. கடலை பருப்பு, சர்க்கரையின் விலையில் மாற்றமில்லை.

இது தொடர்பாக மளிகைக்கடை உரிமையாளர்கள் தரப்பில் விசாரித்தபோது, "குறைந்த வாகனங்கள் மட்டுமே ஊரடங்கால் தற்போது இயக்கப்படுகிறது. வரத்து குறைவாகவே உள்ளது. அதனால்தான் விலை உயர்ந்துள்ளது. இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன் உற்பத்தி அதிகரித்து வாகனங்களின் வருகையும் உயரும். அப்போது விலை இயல்பு நிலைக்கு வரும். தற்போது புதுச்சேரியில் அத்தியாவசியப் பொருட்கள் போதிய அளவில் இருப்பு உள்ளது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x