

புதுச்சேரியில் சீல் வைக்கப்பட்ட சாராயக் கடையின் பின்பக்கக் கதவை உடைத்து 500 லிட்டர் சாராயக் கேன்களை திருடிச் சென்றோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவால் மதுபானக் கடைகள் மற்றும் சாராயக் கடைகள் புதுச்சேரியில் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் மதுபானம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். கள்ளத்தனமாக மது விற்பனை, போலி மதுபான தயாரிப்பு, கள்ளச்சாராய விற்பனை ஆகியவற்றைத் தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், வம்புபட்டு கிராமத்தைச் சேர்ந்த சாராயக் கடை ஒன்றில் 500 லிட்டர் சாராயம் திருடப்பட்டுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடையை சிலம்பரசன் என்பவர் நடத்தி வருகிறார். ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த சாராயக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
கடந்த 5-ம் தேதி அவர் வந்து பார்த்தபோது கடையில் 11 கேன்களில் இருப்பு வைக்கப்பட்ட 500 லிட்டர் சாராயம் இருந்தது. ஆனால், இன்று (ஏப்.11) காலை அவர் சென்று பார்த்த போது பின்பக்கக் கதவை உடைத்து 500 லிட்டர் சாராயம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருக்கனூர் காவல் நிலையத்தில் அவர் புகார் செய்துள்ளார்.