

நாகர்கோவிலின் வேதநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மதியம் 12 மணிக்கெல்லாம் டைசனின் டூவீலர் சுற்றி வருகிறது. முகத்தை மறைத்து கர்ச்சீப் கட்டிக்கொண்டு வாகனத்தில் நூற்றுக்கும் அதிகமான சாப்பாட்டுப் பொட்டலங்களையும் சுமந்தபடி விரைகிறார் டைசன்.
சாலையோரவாசிகள், சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் ஏழை, எளிய மக்களின் வீடுகளுக்கும் தேடிப்போய் இலவசமாக மதிய உணவைக் கொடுக்கிறார். சாலையோரவாசிகளோ டைசனின் டூவீலரைப் பார்த்தாலே, “சிவப்பு வண்டி வந்திருச்சப்போய்...” என்று உற்சாகமாகிறார்கள். அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் எதுவும் தேவை இருக்கிறதா எனக் கேட்டுத் தெரிந்துகொண்டு மறு நாள் அதையும் வாங்கிகொண்டு வந்து தருகிறார் டைசன்.
பொறியியல் பட்டதாரியான டைசன் சுயசார்பு, இயற்கையின் மீதான நேசத்தால் இயற்கை அங்காடி நடத்தி வருகிறார். குமரியை 'ஒக்கி' புயல் தாக்கியபோதும் விளிம்புநிலை மக்களுக்கு இப்படியான உதவிகளைச் செய்தவர், காணி பழங்குடி மக்கள் மீண்டுவர தொடர் பணியில் ஈடுபட்டார். 'கஜா', 'தானே' புயல்களின் போதும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப்போய் உதவினார். இதோ இப்போது கரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் எளிய மக்களுக்காக உணவு சுமக்கிறார் டைசன்.
வேதநகர் பகுதியில் டைசனை சந்தித்தேன். ''சின்ன வயசுல இருந்தே சமூக சேவையில் ஆர்வம் அதிகம். பி.இ., படிச்சுட்டோம்னு ஏதோ ஒரு கம்பெனிக்கு வேலைக்கு போறதுல எனக்கு உடன்பாடு இல்ல. அதனால ஆர்கானிக் ஷாப் போட்டு உக்காந்துட்டேன். அப்படியே பேரிடர் காலங்களில் என்னால முடிஞ்ச உதவிகளை செஞ்சுட்டு இருக்கேன்.
ஊரடங்கு போட்டதும் எளிய மக்களோட வாழ்வாதாரம் ரொம்பவே கேள்விக்குறியாகிடுச்சு. நாகர்கோவில் மாநகராட்சியும், சில தன்னார்வலர்களும் சேர்ந்து மாநகரப் பகுதியில் இருக்கும் ஆதரவில்லாதவங்களுக்கு உணவு கொடுக்குறாங்க. என்னோட வீடு இருக்கிறது புறநகர்ப்பகுதி. இங்கே சாலையோரவாசிகளும், வேலை இழந்த ஏழை, எளிய மக்களும் உணவுக்கு ரொம்ப கஷ்டப்படுறதைப் பார்த்தேன். அதேமாதிரி வீட்டில் ஆண் துணை இல்லாதவர்கள், ஆதரவில்லாத முதியோர்கள்னு என் வீட்டைச் சுத்தி இருக்குறவங்களை முதல்கட்டமா தேட ஆரம்பிச்சேன். ஊரடங்கு அறிவிச்ச முதல் நாளில் 25 பேரோட தொடங்குன இந்தப் பயணம் போகப்போக பயனாளிகளின் எண்ணிக்கை கூட ஆரம்பிச்சுது. இப்போ தினமும் 120 பேருக்கு உணவு கொடுக்குறேன்.
என்னோட நண்பன் சிவதாணு வீட்டுல மெஸ் வைச்சுருக்காங்க. லாபமே இல்லாம அடக்கவிலையிலேயே எனக்கு இந்த உணவுகளை தயாரிச்சுக்கொடுத்து அவுங்களும் கரோனா காலத்துல சேவை செய்றாங்க. தினம் ஒரு சாதம் கொடுக்கிறேன். இன்னிக்கு எலுமிச்சை சாதமும், பருப்பு வடையும் கொடுத்தேன். நாளைக்கு சாம்பார் சாதம்'' என்று சொல்லிக்கொண்டே சிவப்பு வண்டியை ஸ்டார்ட் செய்கிறார் டைசன்.