

‘தேசிய கைத்தறி தினம்’ அறிவிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப் படுகின்றனர்.
1905-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி கொல்கத்தாவில் சுதேசி போராட்டம் தொடங்கப்பட்டது. இதன் நினைவாக ஆகஸ்ட் 7-ம் தேதியை ‘தேசிய கைத்தறி தினமாக’ அறிவிக்க மத்திய ஜவுளித்துறை முடிவு செய்தது. இதை முறைப்படி அறிவிப்பதற்கான விழா, சென்னையில் இன்று நடக்கிறது.
மத்திய ஜவுளித்துறை சார்பில் ‘தேசிய கைத்தறி தினம்’ அறிவிப்பு விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று காலை நடக்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ரோசய்யா, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கைத்தறித் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மேலும், பல்வேறு மாநிலங்களில் இருந்து 3 ஆயிரம் கைத்தறி நெசவாளர்களும் இதில் பங்கேற்கின்றனர். விழாவில், சிறந்த நெசவாளர்களுக்கு ‘சந்த் கபீர்’ விருதுகள் மற்றும் தேசிய விருதுகள் வழங்கப்பட உள்ளன.
விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து இன்று காலை 7.45 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி, 10.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். விமான நிலையத்தில் பிரதமரை தமிழக ஆளுநர் கே.ரோசய்யா வரவேற்கிறார். முதல்வர் ஜெயலலிதாவும் மோடியை வரவேற்க விமான நிலையம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
பிரதமரான பிறகு சென்னை யில் நடக்கும் நிகழ்ச்சியில் முதன்முதலாக மோடி பங்கேற்பதால், அவருக்கு பாஜக சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்க அக்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்படும் பிரதமர், விழா நடக்கும் சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு அரங்குக்கு 11 மணிக்கு வருகிறார். விழா முடிந்ததும் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் செல்லும் பிரதமர், தனி விமானத்தில் டெல்லி திரும்புகிறார்.
பிரதமரின் வருகையையொட்டி சென்னை முழுவதும் உஷார்படுத் தப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடக்கும் பல்கலைக்கழக வளாகம், பிரதமர் வாகனம் வரும் பாதை என பல்வேறு பகுதிகளில் கடந்த 4-ம் தேதி இரவு முதலே தீவிர வாகன சோதனையில் இரவு பகலாக போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்களும் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஹோட்டல்கள், லாட்ஜ்களிலும் தீவிர சோதனை நடந்து வருகிறது. பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப் படுகின்றனர்.
பிரதமர் வருகையை முன்னிட்டு, சென்னை நகரில் நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இதற்காக பிரதமர் மோடி வந்து செல்லும் சாலையின் இருபுறமும் போலீஸார் நிறுத்தப்பட்டனர். முக்கிய சாலைகள் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டன. இதனால் மீனம்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம் பேட்டை, அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. பிரதமர் வந்து செல்லும் பாதையில் இன்றும் தேவையான இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்படலாம் என போலீஸார் தெரிவித்தனர்.
ஜெயலலிதாவுடன் சந்திப்பு
சென்னை வரும் பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தொடர்ந்து அமளி யில் ஈடுபட்டு வருகின்றன. மாநிலங்களவை முடக்கப்படு கிறது. அதிமுகவுக்கு மாநிலங்கள வையில் 11 உறுப்பினர்கள் இருப்பதால், அதன் ஆதரவை பாஜக பெறவேண்டி உள்ளது. மேலும், மக்களவையிலும் 37 எம்.பி.க்களுடன் 3-வது தனிப்பெரும் கட்சியாக அதிமுக இருக்கிறது. இந்நிலையில், பிரதமர் மோடி - முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு அரசியல் ரீதியாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.