

"ஊரடங்கு காரணமாக நெல்லை மாநகராட்சியில் வரும் திங்கள் முதல் பொதுமக்கள் வாரம் 2 நாட்கள் மட்டும் வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள்" என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிவு செய்துள்ள ட்வீட் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்பே அதிகம் இருப்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14-ம் தேதி ஊரடங்கு அமலில் உள்ளது. கரோனா தொற்ரில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. 911 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
9 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இந்நிலையில் கரோனா சமூகப்பரவலாக மாறுவதைத் தடுக்க ஊரடங்கை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என 19 மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
முதல்வர் தலைமையில் இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டம் கூடி ஆலோசிக்கவுள்ளது.
இந்நிலையில் உள்ளாட்சித் தலைவர் எஸ்.பி. வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஊரடங்கு காரணமாக நெல்லை மாநகராட்சியில் வரும் திங்கள் முதல் பொதுமக்கள் வாரம் 2 நாட்கள் மட்டும் வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள்.
வெளியில் வருபவர்களும் புதியதாக வெளியிடப்பட்டுள்ள மூன்று வண்ண அடையாள அட்டைகளுள் எதேனும் ஒன்றை கையில் எடுத்து செல்ல வேண்டும்" என ட்வீட் செய்துள்ளார்.
நெல்லையில் நேற்றைய நிலவரப்படி 56 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலப்பாளையம், பேட்டை, களக்காடு பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கரோனா தொற்று பட்டியலில் நெல்லை 4-வது இடத்தில் உள்ளது. இதனால், நெல்லை மாநகராட்சியில் பொதுமக்களுக்கு மூன்று வண்ண அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அதிகாரபூர்வ தகவல் வந்தவுடன் இந்த அட்டைகள் வீடுவீடாக விநியோகிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நெல்லை மாநகராட்சிப் பகுதியில் 4 லட்சம் பேர் வாழ்கின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரைக்கும் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால், மருத்துவ அவசரம் இருந்தால் இந்த கெடுபிடி தளர்த்தப்படும்.
ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.