மலேசியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை: தமிமுன் அன்சாரி கோரிக்கை

மலேசியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை: தமிமுன் அன்சாரி கோரிக்கை
Updated on
1 min read

மலேசியா சென்றுள்ள இந்தியர்களின் தவிப்பைப் புரிந்து கொண்டு அவர்களை உடனடியாக அங்கிருந்து மீட்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், “மலேசியாவுக்கு குறுகிய கால பயணமாக சென்ற தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அங்கு ஊரடங்கு உத்தரவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியர்கள் வசிக்கும் மஸ்ஜித் இந்தியா பகுதியில் உள்ள மினாரா சிட்டி ஒன், மலாயா மேன்ஷன், சிலாங்கூர் மேன்ஷன் ஆகியன அரசின் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளது. இதனால் அங்கே யாரும் செல்லமுடியாத நிலையும் அங்கிருந்து யாரும் வெளியில் வரமுடியாத நிலையும் உள்ளது.

இதனால் அங்கே இருப்பவர்கள் உணவு, மருந்துகள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். மலேசியாவில் அமலில் இருக்கும் தொடர் ஊரடங்கால் பொருளாதர நெருக்கடியிலும் உள்ளனர். அங்குள்ள இந்தியத் தூதரகம் இதுவரை அவர்களுக்கு முறையான எந்த உதவிகளையும் வழங்கவில்லை. எனவே, அவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் கிடைக்கச் செய்யுமாறு அங்குள்ள இந்தியத் தூதரகத்திற்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்.

அங்கிருந்து அவசரமாக நாடு திரும்ப இதுவரை 3,500 பேர் வரை இந்திய தூதரகத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களை மீட்க நீதிமன்றம் நம் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே, இனியும் தாமதிக்காமல் உரிய துரித நடவடிக்கை மேற்கொண்டு மலேசியாவில் தவிப்பில் இருக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in