

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களை பணியிட மாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஏப்.11) வெளியிட்ட அறிக்கையில், "கோவிட்-19 என்ற கரோனா வைரஸ் தொற்று நோய் பரவலால் நம் நாடானது அவசரகால 144 பிரிவின் கீழ் கட்டுப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், வீட்டிலேயே இருக்கவும் அரசாங்கம் அவ்வப்போது பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறது. போக்குவரத்தின் அனைத்து முறைகளும் மூடப்பட்டுள்ளன.
அரசு தொடர்பான அனைத்து மருத்துவக் குழுக்களும் பொதுமக்களுக்கு அவசர கால ஆதரவை வழங்கி வருகின்றன. இந்த அசாதாரண சூழ்நிலையில் அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களாகிய ஐஓசிஎல், எச்பிசிஎல், பிபிசிஎல், பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் ஒவ்வொரு நிதி ஆண்டு முடிவிலும் பதவி உயர்வு மற்றும் பணி இடமாற்றக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆனால், தற்போதைய மிக நெருக்கடியான சூழ்நிலையில் பொதுத்துறையில் பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் செய்தால் அவர்களும் அவர்களது குடும்பமும் உடல் மற்றும் மன ரீதியாக அச்சத்தையும் சிரமத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதாவது, வைரஸ் பரவல் இருக்கின்றதால் பணியிட மாற்றத்திற்காக புதிய இடத்திற்கு செல்லும் போது அவர்கள் பணிகளை நிர்வகிப்பதிலும், புதிய இடத்தில் தங்குவதிலும் அச்சத்துடனேயே சிரமத்துடன் இருப்பார்கள்.
பொதுத்துறையில் பணியாற்றுபவர்கள் மேற்கொள்ளும் பணிகள் நாடு முழுவதற்குமான மிக முக்கியத்துவத்துவம் வாய்ந்த பணிகளாகும். எனவே, அவர்களின் கோரிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டியது இத்தருணத்தில் மிக அவசியம்.
குறிப்பாக, இப்போதைய அசாதாரண சூழலில் எந்தவொரு அதிகாரியின் இடமாற்றமும் அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் மட்டுமே கருதப்பட வேண்டும்.
மத்திய அரசு, பொதுத்துறையில் ஆண்டுதோறும் பின்பற்றப்பட வேண்டிய பணியிட மாறுதல் தொடர்பாக ஏதேனும் உத்தரவு பிறப்பிக்க முடிவு செய்திருந்தாலும் தற்காலிகமாக அந்த முடிவை நிறுத்திவைக்க வேண்டும். மேலும் இதர பணியிட மாற்ற உத்தரவுகளும் நிறுத்தப்பட வேண்டும். இல்லையெனில், இந்த இடமாற்ற உத்தரவுகள் பணியாளர்களுக்கு ஏற்படும் துன்பங்களை மேலும் அதிகரிக்கும் மற்றும் நிறுவனத்திற்கு குறைந்த உற்பத்தித்திறனை ஏற்படுத்தும்.
எனவே, மத்திய அரசு, கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்ற வேளையில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களை பணியிட மாற்றம் செய்வதை தற்காலிகமாக தவிர்த்து அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.