

ஈரோட்டில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களில் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் 32 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், அவர்களில் 28 பேர் பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர், நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். இவர்களில் 83 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருந்தன. அதில் 14 பெண்கள் உள்பட 26 பேருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதியானது.
இதையடுத்து, அவர்கள் வசிக்கும் கருங்கல்பாளையம் மீராமொய்தீன் வீதி, கள்ளுக்கடை மேடு, பிராமண பெரிய அக்ரஹாரம், பூம்புகார் நகர், முத்து வீதி ஆகிய பகுதிகளில் ஆட்சியர் கதிரவன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்று, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, பெருந்துறை அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று அறிகுறி காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு வந்தவர்களில், 11 பேருக்கு உடல் நலம் சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தெளிவான விவரம் இல்லை
இதனிடையே, ஈரோட்டில் இருந்து டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பிய சிலர், தலைமறைவாக உள்ளதாக மார்ச் 31-ம் தேதி மாவட்ட நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இதுகுறித்து எஸ்பி எஸ்.சக்திகணேசனிடம் கேட்டபோது, ‘ஈரோட்டில் இருந்து டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பிய அனைவரும் கண்டறியப்பட்டு, கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்’ என்றார். இருப்பினும், தாய்லாந்து நாட்டினரைத் தவிர, ஈரோட்டில் இருந்து டெல்லி மாநாட்டுக்கு எத்தனை பேர் சென்று வந்தனர், அவர்களில் எத்தனை பேர் மருத்துவக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுஉள்ளனர் என்ற தெளிவான விவரத்தை இதுவரை மாவட்ட நிர்வாகமோ, காவல்துறையோ தெரிவிக்கவில்லை.