

கரோனா தொற்று இல்லை என விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டு, பின்னர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறையினரால் அறிவிக்கப்பட்டதை அடுத்து டெல்லி பட்டேல் நகரைச் சேர்ந்த நிதின் ஷர்மா(30) என்பவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான பொன்முடி கூறியது:
கரோனா வைரஸ் தொற்று தொடர்பான மத்திய மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமானதாக உள்ளது. எந்த அரசாக இருந்தாலும் இந்த நடவடிக்கையைத்தான் எடுத்திருக்கும்.
எனினும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுவதாக கருதுகிறேன். வெளிநாடுகளுக்கு சென்றவர்கள், அவர்களின் குடும்பங்கள் சோதனைக்குள்ளாகும்போது அவர்களைச் சந்தித்தவர்கள் உள்ளிட்ட விஷயங்களை அரசு அலட்சியப்படுத்துவதாக தோன்றுகிறது.
மக்கள் விழிப்புடன் இருக்க உண்மையை சொல்ல வேண்டும். பரிசோதனையில் உள்ளவர்களின் தற்போதைய நிலையைக் கூட, பரிசோதிக்கும் மருத்துவர்கள் சொல்லக்கூடாது என்று அரசு எச்சரித்துள்ளதாக தெரிய வருகிறது. இது மருத்துவர்களின் உரிமைகளை தடுப்பதாக உள்ளது. இதில் அரசியல் செய்யக்கூடாது என்றார்.