

விருதுநகரில் காய்கறி, மளிகை மற்றும் மருந்துக் கடைகளில் கூடுதல் விலைக்கு பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்.பி. ஸ்டாலின் திடீர் ஆய்வு நடத்தினார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக தேசிய அளவிலான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடைவிதிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் வசதிக்காக விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக காய்கறி மொத்த வியாபார சந்தை அமைக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் மளிகைக் கடைகள் மற்றும் மருந்தகங்கள் வழக்கம் போல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு காலத்தில் பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பதுக்கி வைக்கப்படுகிறதா என்பது குறித்தும் குறிப்பிட்ட விலையை விட கூடுதல் விலைக்கு பொருட்கள், மருந்துகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதா எனப் புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து அத்தியாவசியப் பொருட்கள் கூடுதல் விலைக்கு என்பது குறித்தும் விருதுநகரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பி ஸ்டாலின் இன்று பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ மற்றும் போலீசார் உடனிருந்தனர்.