

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா தொற்று ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த 70 வயது பெண் இன்று மாலை உயிரிழந்தார்.
தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வரும் ஒரு பெண் மற்றும் அவரது கணவர், மாமியார் ஆகியோர் கரோனா அறிகுறியுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 6-ம் தேதி அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் மூவருக்கும் கரோனா தொற்று இருப்பது 7-ம் தேதி மாலை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மூவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் லேப் டெக்னீசியனின் மாமியாரான 70-வது பெண் இன்று மாலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் சுறுசுறுப்படைந்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணுக்கு, டெல்லி மாநாட்டுக்கு சென்றவர் மூலம் கரோனா வைரஸ் பரவியுள்ளது. தூத்துக்குடி ராமசாமிபுரத்தை சேர்ந்த ஒருவர் டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பினார்.
அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அந்த நபர், தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள லேப் டெக்னீசியன் வீட்டுக்கு எதிரேயுள்ள கடைக்கு அடிக்கடி வந்து செல்வாராம்.
அந்த கடைக்கு இந்த 70 வயது பெண்ணும் செல்வாராம். இதன் மூலம் அந்த பெண்ணுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு குடும்பத்தினருக்கு பரவியுள்ளது. தற்போது அவரது குடும்பத்தினர் மூலம் மேலும் சிலருக்கும் தொற்று பரவியிருப்பது குறிப்பிடதக்கது.