கரோனா வார்டு மருத்துவக்கழிவுகள் எப்படி கையாளப்படுகிறது?

கரோனா வார்டு மருத்துவக்கழிவுகள் எப்படி கையாளப்படுகிறது?
Updated on
2 min read

கரோனா வார்டில், சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் பயன்படுத்தும் கவச உடைகள், முகக்கவசங்கள், நோயாளிகள் பயன்படுத்தும் முகக்கவசங்கள், அவர்களுக்குப் பயன்படுத்தப்படும் ஊசி போன்ற மருத்துவ உபகரணங்கள் எப்படி அப்புறப்படுத்தப்படுகின்றன? என்பதை அறிவோம்.

‘கரோனா’ வார்டுகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது சேரும் மருத்துவக்கழிவுகளைப் பாதுகாப்பாகக் கையாள மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல்களை வழங்கி கண்காணித்து வருகிறது.

தமிழகத்தில் 304 அரசு மருத்துவமனைகளும், 854 தனியார் மருத்துவமனைகளும் உள்ளன. இவை தவிர, 1800 அரசு ஆரம்ப சுகாதார மையங்களும், பதிவு பெறாத ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய தனியார் கிளினிக்குகளும் செயல்படுகின்றன.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது இந்த மருத்துவமனைகளில் அழுக்கடைந்த அல்லது ரத்தக் கறைப்பட்ட கட்டு துணிகள், அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்பட்ட கையுறைகள், முககவசங்கள், சிறுநீர் பைகள், ஊசி மருந்துகள், சிரிஞ்சுகள், ஊசிகள் உள்ளிட்ட பல்வகை பயோமெடிக்கல் கழிவுகள் தினமும் சேருகின்றன. இவை தொற்று நோயைப் பரப்பக்கூடியவை.

அதனால், இவற்றை சாதாரண கழிவுகளோடு சேர்த்து அப்புறப்படுத்தக்கூடாது. முறையாக பராமரித்து பாதுகாப்பாக அழிக்க வேண்டும். இதை அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து நிர்வாகங்கள் கண்காணிக்க வேண்டும்.

சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டத்தில் பயோமெடிக்கல் மருத்துவ கழிவுகளை பராமரிக்க தனிச் சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதனால், பயோமெடிக்கல் கழிவுகளைச் சரியாகப் பராமரிக்காமல் இருப்பது சட்டத்தை மீறியக் குற்றமாகும்.

அரசு மருத்துவமனைகளில் வெளியாகும் மருத்துவக்கழிவுகளை பாதுகாப்பாக சேகரித்து அவற்றை அழிக்க தனியார் மருத்துவக்கழிவு நிறுவனங்கள் ஒப்பந்தம் எடுத்துள்ளன. அதற்காக அந்த நிறுவனங்கள், தனியாக மருத்துவக் கழிவுகளை அழிக்கும் (பயோமெடிக்கல் கழிவு) தொழிற்சாலைகளை, தமிழகத்தில்ஆங்காங்கே நிறுவியுள்ளன.

மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வெளியாகும் மருத்துவக்கழிவுகளை தனியார் மருத்துவக்கழிவு நிறுவனம் ஒன்று பெற்று, அதனை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பயோமெடிக்கல் மருத்துவக்கழிவு தொழிற்சாலைக்கு கொண்டு சென்று அழிக்கின்றன.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ‘கரோனா’ வேகமாகப் பரவும்நிலையில் அந்த நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெறுகின்றனர். அதனால், அந்த வார்டுகளில் வெளியாகும் கழிவுகள், எப்படி கையாளப்படுகின்றன? பாதுகாப்பாக பெற்று அழிக்கப்படுகிறதா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து மதுரை மாவட்ட தொற்று நோய்(கரோனா) தடுப்பு நியமன அலுவலரும், ஒய்வு பெற்ற ‘டீன்’னுமான மருதுபாண்டியன் கூறுகையில், ‘‘மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ‘கரோனா’ வார்டு மருத்துவக்கழிவுகளை கையாள வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.

அதன்படி பிரத்தியேகமான பைகளில் இந்தக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. சாதாரண மருத்துவக்கழிவுகள் ஒரு அடுக்கு பையில் எடுக்கப்படும். ஆனால், ‘கரோனா’ வார்டுகளில் வெளியாகும் மருத்துவக்கழிவுகள் இரண்டு அடுக்கு கொண்ட 2 பைகளில் சேகரிக்கப்பட்டுதனியார் பயோமெடிக்கல் கழிவு தொழிற்சாலை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

இந்த கழிவுகளை வாகனங்களில் ஏற்றுவதற்கு தனி குப்பை தள்ளுவண்டிகள் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு முன் இந்த கழிவுகளில் உள்ள கிருமிகள் சோடியம் ஹைபோ குளோரைடு போன்ற கிருமி நாசினிகளை கொண்டு அழிக்கப்பட்டு ஒப்படைக்கப்படுகின்றன. அதன்பிறகு பயோமெடிக்கல் கழிவு தொற்சாலைக்கு கொண்டு அங்கு பாதுகாப்பாக அழிக்கப்படுகின்றன, ’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in