Published : 10 Apr 2020 05:27 PM
Last Updated : 10 Apr 2020 05:27 PM

15 மண்டலங்களில் ஆய்வு; தொற்று சந்தேகத்துடன் 661 பேர் கண்காணிப்பு: சென்னை மாநகராட்சி தகவல்

கரோனா தொற்று பாதிப்பைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் சென்னை மாநகராட்சி, தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் 661 பேர் கண்காணிப்பில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சென்னையில் கரோனா தொற்று நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு பணிகளைச் செயல்படுத்தி வருகிறது.

மாநகரம் முழுமையிலும், அனைத்து வீடுகளிலும் தினந்தோறும் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமங்கள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அவர்களை சென்னை மாநகராட்சி பெருமக்கள் ஆய்வு செய்வார்கள். அது சாதாரண சளி மற்றும் காய்ச்சலாக இருப்பின் அதற்கான மருத்துவம் மாநகராட்சியின் மூலம் அளிக்கப்படும்.

மேல் சிகிச்சை தேவைப்படின், பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க சென்னை மாநகராட்சியால் செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு, மாநகரம் முழுவதும் நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

இப்பணிக்கு சென்னை மாநகராட்சியின் மொத்த பரப்பளவில் உள்ள சுமார் 10 லட்சம் கட்டிடங்களில், 75-100 கட்டிடங்கள் என்ற வகையில் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, மொத்தம் சுமார் 13,100 கூறுகள் உருவாக்கப்படும்.

இவ்வனைத்துப் பணிகளையும் நேரடியாகக் கண்காணிப்பு செய்ய பெருநகர சென்னை மாநகராட்சியின் 16,000 ஊழியர்கள் களத்தில் பணியாற்ற உள்ளனர். இந்த ஊழியர்கள், 75-100 வீடுகளை நாளை முதல் தினந்தோறும் தொடர்ந்து 90 நாட்களுக்கு இடைவிடாது தொடர் ஆய்வு செய்து, தினமும் அதற்குண்டான பதிவுகளை உரிய முறையில் மேற்கொள்வார்கள்.

இதன் மூலம், பொதுமக்களின் ஆரோக்கியம் 24 மணிநேரமும் கண்காணிக்கும் வகையில் ஒரு அமைப்பினை சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 15 மண்டலங்களில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் 15 மண்டலங்களில் இதுவரை 11 ஆயிரத்து 838 களப்பணியாளர் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 15 மண்டலங்களிலும் உள்ள 10 லட்சத்து 70 ஆயிரத்து 838 வீடுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 20 லட்சத்து 70 ஆயிரத்து 73 நபர்கள் அணுகப்பட்டனர். ஒட்டுமொத்தமாக இதுநாள் வரை அணுகப்பட்ட வீடுகள் எண்ணிக்கை 42 லட்சத்து 3 ஆயிரத்து 287. அணுகப்பட்ட மொத்த நபர்கள் 67 லட்சத்து 56 ஆயிரத்து 897 பேர்.

இதில் ஒட்டுமொத்தமாக காய்ச்சல் சளித்தொற்று காரணமாக தொற்று உள்ளதாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் 1973 பேர் . சாதாரண காய்ச்சல், சளி என தெரியவந்தவர்கள் எண்ணிக்கை 1312 பேர். 661 பேர் சந்தேகத்தின் பேரில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் மண்டலம் 1 திருவொற்றியூர், 5 ராயபுரம், 8 அண்ணா நகர் ஆகிய மண்டலங்களில் அதிக எண்ணிக்கையில் கண்காணிப்பில் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x