

கரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நாமக்கல் மருத்துவர்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று வருகின்றனர்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று உறுதியான கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 பேர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 45 பேர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 33 பேர் என 101 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 8 பேர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று நேற்று முன்தினம் உறுதியானதை அடுத்து அவர்கள் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தப்படியாக கரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெறுபவர் எண்ணிக்கை கரூரில் அதிகம். இதையடுத்து கரூரில் கரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெறுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களிலிருந்து மருத்துவர்கள் கேட்கப்பட்டிருந்தனர்.
இதுகுறித்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரோஸி வெண்ணிலா 'இந்து தமிழிடம்' கூறியபோது, "நாமக்கல்லில் இருந்து இன்றுமருத்துவர்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வருகின்றனர்" என்றார்.