

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள மீன் சந்தையில், அழுகிய மீன்கள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்தது.
கேரள மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ‘ஓமான் மத்தி’ வகை மீன்கள்தான் இப்படி அழுகிய நிலையில் விற்பனைக்கு வந்தன.
மொத்தம் 500 கிலோ எடையுயுள்ள ரூ.60 ஆயிரம் மதிப்பிலான மீன்கள் வால்பாறை சந்தைக்கு அழுகிய நிலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட தகவல், வால்பாறை நகராட்சி அலுவலர்களுக்கு வந்தது. இதையடுத்து, நகராட்சி ஆணையர் பவுன்ராஜ் உத்தரவின் பேரில் நகராட்சிப் பொறியாளர் சரவண பாபு தலைமையில் சென்ற குழு, அந்த மீன்களைப் பறிமுதல் செய்தது. பின்னர் குழி வெட்டி அதில் மீன்களைக் கொட்டி டீசல் ஊற்றித் தீவைத்து அழித்து மண் போட்டு சுகாதாரப் பிரிவு ஊழியர்கள் மூடினர்.
வால்பாறை மலைகள் சூழ்ந்த குளிர்ப் பிரதேசம் என்பதால், இங்கே விற்பனைக்குக் கொண்டுவரப்படும் மீன்கள் அழுகிப்போவதற்கு வாய்ப்பே இருக்காது. கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக, 15 நாட்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட மீன்கள் இப்படி மருந்து தடவிப் பதப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ‘காலையில் உணவுப் பொருட்கள் விற்பதற்காகக் கடைகள் திறக்கலாம்’ என்று ஊரடங்கு உத்தரவு சற்றே தளர்த்தப்பட்ட பின்பே மீன்களைச் சந்தைக்குக் கொண்டுவந்துள்ளனர். அநேகமாக இதுபோல பதுக்கப்பட்ட மீன்கள், மீண்டும் சந்தைக்கு வர வாய்ப்புண்டு என்றும் சொல்லப்படுகிறது.
இது குறித்து வால்பாறை நகராட்சி ஆணையர் பவுன்ராஜிடம் பேசியபோது, “இதற்கு என்ன மருந்து தடவிப் பதப்படுத்தினார்கள் என்பது தெரியவில்லை. அநேகமாக ஃபார்மலின் போட்டிருக்கலாம். அது ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும். இதுபோல பதப்படுத்தப்பட்டு அழுகிய நிலையில் மீன்கள் வால்பாறை கடைத் தெருவுக்கு இதுவரை கொண்டுவரப்பட்டதில்லை. இதுதான் முதல் முறை. மீன் விற்பனையாளரின் வீட்டிலும் அழுகிய மீன்கள் பதுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து எங்கள் அலுவலர்கள் தீவிரமாகச் சோதனை நடத்தி வருகிறார்கள். ஊரடங்கு காலத்தில் மீன், இறைச்சி போன்ற விஷயங்களில் இப்படியான செயல்கள் நடக்க நிறைய வாய்ப்புண்டு. எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்; இப்படியான தகவல் கிடைத்தால் உடனடியாக நகராட்சிக்குத் தெரிவிக்க வேண்டும்” என்றார்.
கவனம் மக்களே!