

புதுச்சேரியில் உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு மார்ச் மாத ஊதியம் தராததால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், ஊழியர்களின் குடும்பங்கள் பரிதவிக்கின்றன.
கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலாகியுள்ளதால் பணியில் உள்ளோரின் ஊதியத்தைத் தர மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதை முதல்வர் நாராயணசாமியும் வலியுறுத்தி வந்தார்.
ஆனால், அரசால் நடத்தப்படும் உயர்கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மார்ச் மாத ஊதியத்தை இதுவரை தரவில்லை, புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் மொத்தம் அரசு சொசைட்டியைச் சேர்ந்த 21 கல்லூரிகள் உள்ளன.
அதில், மருத்துவம் சார்ந்த 8 கல்லூரிகளுக்கு ஊதியம் தந்துவிட்டனர். மீதமுள்ள 13 கல்லூரிகளில் 3 கல்லூரிகள் தங்களிடம் உள்ள நிதியை ஊதியமாகத் தந்துவிட்டன. தற்போது பத்து கல்லூரிகளை சேர்ந்தோருக்கு ஊதியம் வரவில்லை.
இதுபற்றி புதுச்சேரி அரசு சொசைட்டி கல்லூரிகள் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ராம்குமார் கூறுகையில், "ஊதியம் தராதது பற்றி உயர்கல்வித்துறை இயக்குநர் ரெட்டி, செயலர் அன்பரசு ஆகியோரிடம் தெரிவித்தும் முன்னேற்றமில்லை. இரு அதிகாரிகளும் ஊதியத்தைத் தர இதுவரை எவ்வித ஆக்கபூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை. அலட்சியமாகச் செயல்படுகிறார்கள்.
மார்ச் மாத ஊதியத்துக்கான நிதியை வழங்க பிப்ரவரி 3-ம் வாரத்திலேயே நிதித்துறை ஒப்புதல் தந்துவிட்டது. ஆனால், இந்நிதி கரோனா நிவாரண நிதி திட்டத்துக்குப் பயன்படுத்தப்பட்டு விட்டதால் மத்திய அரசு நிதி வரும் வரை இந்நிலையே தொடரும் என்று நம்பத்தக்குந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் குடும்பங்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். பல குடும்பங்கள் ஒற்றை வருவாயை நம்பி வாழ்கின்றனர். குழந்தைகள், முதியோர் மருத்துவம் மற்றும் அடிப்படை வசதிகளைச் செய்து தர முடியாமல் உள்ளோம்" என்று வேதனையுடன் தெரிவித்தார்.