

கரோனா பரவல் மூன்றாம் கட்டத்திற்குச் செல்லாமல் தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி மக்களிடமே உள்ளது என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை, எழும்பூரில் இன்று (ஏப்.10) அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"இந்த அம்மா உணவகத்தில் விலையில்லாமல் உணவு வழங்கப்படுகிறது. முதல்வர் ஏற்கெனவே அம்மா உணவகத்தில் ஆய்வு செய்திருக்கிறார். இரவு நேரத்தில் உணவு வழங்கப்படும் நேரத்தை நீட்டிப்பது குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
கும்பல் சேரக்கூடாது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அம்மா உணவகத்திலும் அது கடைப்பிடிக்கப்படுகிறது. எவ்வளவு பேர் வந்தாலும் அவர்களுக்கு உணவு வழங்கப்படும். அதற்கான உணவுப்பொருட்கள் இங்கு உண்டு.
நாம் இரண்டாம் கட்டத்திற்குச் சென்று விட்டோம். மூன்றாம் கட்டத்திற்குச் செல்லக் கூடாது. மூன்றாம் கட்டத்திற்குச் செல்லாமல் இருக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
ஊரடங்கை மீறியதாக 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 46 லட்சம் ரூபாய்க்கு மேல் அபராதம் பெறப்பட்டுள்ளது.
கரோனா பரவல் மூன்றாம் கட்டத்திற்குச் செல்லாமல் தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி மக்களிடமே உள்ளது. மக்கள் ஒத்துழைக்க வேண்டும்".
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.